கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமையன்று உயிரிழந்த இளைஞர் நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
புணே தேசிய நுண்கிருமி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, உயிரிழந்த நபருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த 24 வயதான இளைஞர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு நிஃபா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை உறுதிப்படுத்த புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டதில் நிஃபா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்ததாக இதுவரை 151 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 5 பேருக்கு நிஃபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எனினும், பயப்படக்கூடிய அளவுக்கு நிஃபா தொற்று மாநிலத்தில் பரவவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.