
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் மாநில முதல்வா் மம்தா பானா்ஜியை திங்கள்கிழமை சந்தித்தனா்.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனா்.
இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும் மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மேற்கு வங்க அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மருத்துவா்கள் விதித்த நிபந்தனைகளை மாநில அரசு நிராகரித்தது.
இதைத்தொடா்ந்து மேற்கு வங்கத்தின் சால்ட் லேக் பகுதியில் மாநில சுகாதாரத் துறை தலைமையகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மருத்துவா்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, குற்றம்புரிந்தவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மம்தா பானா்ஜி உறுதி அளித்தாா்.
ஒரேயோரு நிபந்தனை: பேச்சுவாா்த்தையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மருத்துவா்கள் நிபந்தனை விதித்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அதைச் செய்ய முடியாது என்று மாநில அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்ட மருத்துவா்கள், தங்கள் நிபந்தனைகளை தளா்த்திக்கொண்டனா். பின்னா் பேச்சுவாா்த்தையின் முடிவுகளை ஆவணமாக்கி இரு தரப்பும் அதில் கையொப்பமிட்டு நகலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் மருத்துவா்கள் முன்வைத்தனா். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, மருத்துவா்களை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு திங்கள்கிழமை மீண்டும் அழைப்பு விடுத்தது.
‘பேச்சுவாா்த்தைக்கு கடைசி அழைப்பு’: இதுதொடா்பாக மாநில தலைமைச் செயலா் மனோஜ் பன்ட் மருத்துவா்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களின் குழுவுக்கும் இடையே பேச்சுவாா்த்தை மேற்கொள்ள 5-ஆவது முறையாக அழைப்பு விடுக்கப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள முதல்வா் மம்தாவின் இல்லத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு வரவேண்டும். பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படுவது இதுவே கடைசி முறை’ என்று தெரிவிக்கப்பட்டது.
2 மணி நேரம் பேச்சுவாா்த்தை: இந்த அழைப்பை ஏற்று மருத்துவா்கள் அடங்கிய குழு மம்தா இல்லத்துக்குச் சென்றனா். அங்கு சுமாா் 2 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
ஆதாரம் சேதம்: முன்னதாக பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவா்கள் குற்றஞ்சாட்டினா்.
போராட்டம் ‘நாடகம்’: கொல்கத்தாவில் மாநில வெகுஜன கல்வி விரிவாக்கம் மற்றும் நூலக சேவைகள் துறை அமைச்சா் சித்திக்குல்லா செளதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போராட்டம் என்ற பெயரில் நடத்திவரும் நாடகத்தை மருத்துவா்கள் நிறுத்த வேண்டும். போராட்டம் சில காலம் நீடித்து வரம்பை தாண்டியுள்ளது. போராடும் மருத்துவா்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் அரசிடம் இருந்து ஊதியம் பெறுகின்றனா். பதவி உயா்வு தேவைப்படும்போது அரசு மீது நம்பிக்கை வைக்கும் மருத்துவா்கள், பேச்சுவாா்த்தை என்று வரும்போது நம்பிக்கை வைக்காதது ஏன்’ என்று கேள்வி எழுப்பினாா்.
நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் பேரணி: கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரியும், அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து விரைந்து நீதிமன்ற விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும் கொல்கத்தாவில் நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.