பயங்கரவாதி அஃப்சல் குருவை காப்பாற்ற போராடிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் தில்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால் விமர்சித்துள்ளார்.
மேலும், தில்லிக்கு இன்று மிகவும் சோகமான நாள் என்றும், அதிஷி டம்மி முதல்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷியை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால்,
”இன்றைய நாள் தில்லிக்கு மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அஃப்சல் குருவின் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் தில்லு முதல்வராக்கப்பட்டுள்ளார்.
இவரின் பெற்றோர்தான், பயங்கரவாதி அஃப்சலை விடுவிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு வழங்கினர். இவர்களை பொறுத்தவரை அஃப்சல் ஒரு நிரபராதி மற்றும் அரசியல் சதியால் பொய் வழக்கு போடப்பட்டதாகும்.
மேலும், அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை. கடவுள்தான் தில்லியை காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமனதாக தேர்வு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், தில்லியின் புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், தில்லி பேரவைத் தேர்தல் வரை முதல்வராக நீடிப்பார் என்றும், இன்று மாலை துணைநிலை ஆளுநரை சந்தித்து கேஜரிவால் ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.