மாதவி புச் குறித்த உண்மைகள் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முன்பே தெரியுமா? காங்கிரஸ்

செபி தலைவர் மாதவி புச் மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி...
Jairam Ramesh
ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்)ENS
Published on
Updated on
2 min read

செபி தலைவர் மாதவி புச் தம்பதி குறித்து உண்மைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் 2022-இல் இருந்தே தெரியுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து செபி தலைவர் அளிக்கும் விளக்கங்கள், கூடுதல் கேள்விகளை எழுப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

விசாரணை நியாயமாக நடந்ததா?

செபி தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை முதல்முறையாக பேசினார்.

அப்போது, மாதவி புச் மற்றும் அவரது கணவர், குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கங்கள் அளித்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

“செபி தலைவர் தனிப்பட்ட நிதி ஆதாயம் பெற்ற விவகாரத்தில், மத்திய அரசின் மெளனத்தை இறுதியாக நிதியமைச்சர் கலைத்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து புச் தம்பதி பதிலளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அளிக்கும் பதில்கள், மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன. செபி தலைவர் மற்றும் அவரது கணவரின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து வெளிவந்துள்ள உண்மைகளை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

தற்போது கேள்வி என்னவென்றால், 2022ஆம் ஆண்டில் இருந்தே இந்த உண்மைகள் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தெரியுமா என்பதுதான். இது சாதாரணமான விஷயம் என்று நினைத்துவிட்டார்களா? மேலும், மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரின் செயல்பாடு, எந்த வகையிலும் சமரசம் செய்யாதது என்றும் அவர்கள் நினைக்கிறார்களா?

அதானி குழுமம் மீதான குற்றச்சாடில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, செபியால் நடத்தப்பட்ட விசாரணை நியாயமாகவும், முழுமையாகவும் நடத்தப்பட்டதா?

இந்த விஷயம் இன்னும் முடியவில்லை, இன்னும் நிறைய சொல்ல வேண்டியது உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாதவி புச் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபி தலைவர் மாதவி மற்றும் அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தார் என்று ஹிண்டன்பர்க் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்த குற்றச்சாட்டை மாதவி புச் மற்றும் அவரது கணவர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியரான மாதவி, செபியில் இணைந்த பிறகும் அந்த வங்கியிடம் வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி வரை ஊதியமாக பெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியது.

மேலும், அகோரா அட்வைஸ்சரி மற்றும் அகோரா பார்ட்னர்கள் என்ற இரு நிறுவனங்களில் 99 சதவிகிதம் பங்குகளை மாதவி புச் வைத்துள்ளதாகவும், செபி உறுப்பினராக சேர்ந்த பிறகும் வருமானம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இரண்டாவது முறையாக விளக்கம் அளித்த புச் தம்பதிகள், செபி தலைவரான பிறகு அகோரா அட்வைஸ்சரி மற்றும் அகோரா பார்ட்னர்கள் ஆகிய நிறுவனங்களின் கோப்புகளை ஒருபோதும் கையாண்டதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐசிஐசிஐ வங்கியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், அதற்கான ஓய்வூதிய பலன்களை மட்டுமே பெற்றதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.