
நிதீஷ் குமாரும், ஐக்கிய ஜனதா தளமும் பிகார் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்திவிட வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. இப்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்தான் முடிவுக்கு வருகிறது என்பதால், அதை இப்போதே விரைவுபடுத்தத் தேவையில்லை என்பது பாஜகவின் கருத்து.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதக் கடைசியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறக் கூடும். அப்போது சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, பிகாருக்கும் தேர்தல் நடத்திவிடலாம் என்று முதல்வர் நிதீஷ் குமார் பாஜகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்குக் காரணம் இருக்கிறது.
கடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களாக, ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2010-இல் 115 இடங்களைப் பெற்ற அந்தக் கட்சியின் பலம், 2015-இல் 71-ஆகக் குறைந்தது என்றால், 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் மேலும் குறைந்து இப்போது வெறும் 43 இடங்கள் மட்டுமே இருக்கிறது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் குறைந்ததற்கு, சிராக் பாஸ்வானின் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் விரும்பாததுதான் காரணம். பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்றும், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் தனது லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்றும் சிராக் பாஸ்வான் முடிவெடுத்தார். அந்தக் கட்சி வாக்குகளைப் பிரித்ததால், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் பலர் தோல்வியைத் தழுவினர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் கூட்டணியில் இணைந்தார் சிராக் பாஸ்வான். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தால், மக்களவை வெற்றிபோல வெற்றி பெறலாம் என்பது முதல்வர் நிதீஷின் கணிப்பு.
இன்னொரு திருப்பம் ஏற்பட இருப்பதை நிதீஷ் குமார் ஏனோ யோசிப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் வியூகங்கள் வகுக்கும் பிரசாந்த் கிஷோர், வர இருக்கும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில், "ஜன் சுராஜ்' என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார். 2020 தேர்தலில் சிராக் பாஸ்வான் ஏற்படுத்திய பாதிப்பை அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஏற்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.