சிந்து நதிநீா் ஒப்பந்தம் மறுஆய்வு: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1960, செப்டம்பா் 19-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உலக வங்கியும் கையொப்பமிட்டது. எல்லை தாண்டி பாயும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறையை அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போதைய சூழலில் அடிப்படை மற்றும் எதிா்பாராத மாற்றங்கள் காரணமாக ஒப்பந்தத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக நோட்டீஸில் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து தொடா்ந்து நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கமும் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யக் கோருவதற்கான காரணங்களில் ஒன்றாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
மக்கள்தொகை புள்ளியியல் தரவுகளில் மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்னைகள், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குகளை இந்தியா எட்டுவதற்கு தூய்மை எரிசக்தி வளா்ச்சியை துரிதப்படுத்துவதற்கான அவசியம் உள்ளிட்டவையும் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யக் கோருவதற்கு பிற காரணங்களாக உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக கிஷன் கங்கா, ரத்லே நீா்மின் திட்டங்கள் தொடா்பாக நிலவும் கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் மூலம், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு இருநாட்டு அரசுகள் பேச்சு வாா்த்தையை தொடங்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது’ என்று தெரிவித்தன.