ஜம்மு-காஷ்மீர் முதல்கட்டத் தேர்தலில் 59% வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குப்பதிவு...
வாக்களிக்க வாக்குச்சாவடியில் காத்திருந்த பெண்கள்
வாக்களிக்க வாக்குச்சாவடியில் காத்திருந்த பெண்கள்பிடிஐ
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. (இரவு 7.30 மணி நிலவரம்)

ஜம்முவிலுள்ள கிஷ்துவார் தொகுதியில் அதிக வாக்குகளும், காஷ்மீரின் புல்வாமா தொகுதியில் குறைந்தபட்ச வாக்குகளும் பதிவாகின.

ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (செப். 18) நடைபெற்றது.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

58.85 % வாக்குப்பதிவு

வாக்குச்சாவடிகளில் ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிற்பகல் வரை 41 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன் பிறகு மாலையில் படிப்படியாக வாக்கு சதவீதம் அதிகரித்தது.

இரவு 7.30 மணி நிலவரப்படி ஜம்மு - காஷ்மீரில் 58.85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கிஷ்துவார் தொகுதியில் 77.23 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக புல்வாமா தொகுதியில் 43.87 சதவீத வாக்குகள் பதிவாகின.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களமிறங்கின.

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக புல்வாமா, ஷோபியான், குல்கம், கிஷ்துவார், அனந்தநாக், ராம்பன் மற்றும் தோடா ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மொத்தம் 219 வேட்பாளா்கள் போட்டியிட்டனர். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள். தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெரும்பாலான தொகுதிகளில் திட்டமிட்டபடி அமைதியான முறையில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com