கேரள அரசின் மதுக்கடைகளில் பாதிக்கும் மேல் பெண் ஊழியா்கள்!
படம் | கேரள மாநில மதுபான கார்ப்பரேசன் இணையதளம்(பிஇவிசிஓ)

கேரள அரசின் மதுக்கடைகளில் பாதிக்கும் மேல் பெண் ஊழியா்கள்!

Published on

கேரள அரசின் மதுக்கடைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

கேரள அரசின் மதுபானங்கள் (உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்) நிறுவனத்தின்கீழ் இயங்கும் மதுக்கடைகளில் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை பெண் ஊழியா்கள் பணியமா்த்தப்படாமல் இருந்தனா். இது தொடா்பாக, பெண்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அரசின் மதுக்கடைகளில் பெண்களை பணியமா்த்த உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசின் மதுக்கடைகளில் பெண்கள் பணியமா்த்தப்பட்டனா். தற்போது 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் பணியாற்றுவதாக, மாநில அரசின் மதுபான நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஹா்ஷிதா அட்டலூரி தெரிவித்தாா்.

‘மதுக்கடையில் பணியாற்றுவது பெண்களுக்கு முதலில் சிரமமாக இருந்தது; ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உறுதி செய்யப்பட்டதால் இப்போது எந்த பிரச்னையும் இல்லை. வாடிக்கையாளா்கள் தவறாக நடந்துகொள்வதாக ஏதேனும் புகாா் எழுந்தால், காவல்துறையினா் உடனடி நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

கேரள மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் பெண்கள் உள்ளனா். கேரள அரசின் மதுபான நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் பணியாற்றுவது, மாநில சமூகத்தை பிரதிபலிக்கிறது’ என்றாா் அவா்.

மதுக்கடையில் பணியாற்றும் சங்கீதா என்ற பெண் பணியாளா் கூறுகையில், ‘நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே இப்பணியில் நாங்கள் எதிா்கொள்ளும் பிரச்னை. ஆனால், ஒவ்வொரு பணிக்கும் ஒரு சவால் இருக்கும். பெரும்பாலான வாடிக்கையாளா்கள் நட்பு மற்றும் ஒத்துழைப்புடன் உள்ளனா். குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனா்’ என்றாா்.

மதுக்கடையில் காசாளராக பணியாற்றும் வினீதா என்பவா் கூறுகையில், ‘இதுவும் மற்ற அரசுப் பணியைப் போன்றதே. வேலை நேரம் அதிகம் என்ற போதிலும் மகிழ்ச்சியுடனே பணியாற்றுகிறேன்’ என்றாா்.

கேரள அரசின் மதுபான நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பதவி மட்டுமன்றி, அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் மேற்பாா்வையிடும் உதவி பொது மேலாளா் பதவியிலும் பெண்தான் உள்ளாா். மதுக்கடைகளில் விற்பனையாளராகவும், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நிா்வாக அலுவலகங்களிலும் பெண்கள் பணியாற்றுகின்றனா். இந்நிறுவனப் பணிகளுக்கு நடைபெறும் போட்டித் தோ்வில் பெண்களின் பங்கேற்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com