
பாலஸ்தீன கொடியை ஏந்திச்செல்வதில் எந்தத் தவறுமில்லை என கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் இன்று (செப். 19) தெரிவித்தார்.
பாலஸ்தீனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்நாட்டுக் கொடியை வைத்திருப்பதும், ஏந்திச் செல்வதும் தவறில்லை எனக் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, பாலஸ்தீனத்துக்கு மத்திய அரசு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அதனால் பாலஸ்தீனக் கொடியை வைத்திருப்பதிலும், அதனை ஏந்திச் செல்வதிலும் எந்தத் தவறுமில்லை. பாலஸ்தீன கோரிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளித்ததால்தான் அவர்கள் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியிருந்தனர்.
மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால், இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். அடுத்தவொரு நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்புவது தவறான செயல். அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தேச விரோதிகள். அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள். இங்கு, மத்திய அரசு ஆதரவாக உள்ளதால் பாலஸ்தீனக் கொடியை ஏந்துவதில் தவறில்லை.
ஹிந்து - முஸ்லிம்களிடையே சண்டையை ஏற்படுத்தி அதனை வாக்குகளாக்க மாற்றுகிறது பாஜக. காங்கிரஸ் அவர்களைப் போல அல்ல. நாங்கள் செய்த நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறோம்.
மாண்டியாவில் விநாயகர் சிலைகளை கரைக்க எடுத்துச்செல்லும் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதி என்பவர் மக்களை பிரித்துப் பார்க்கக்கூடாது. சாதி, மத அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம்
கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்திற்குட்பட்ட நாகமங்களா பகுதியில் அதிக அளவு முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். பதரிலோப்பூர் என்கிற கிராமத்திலிருந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக நாகமங்களா வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை நிறுத்தி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
இதனால், இரு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கலவரத்தில் முடிந்தது. கூடத்தில் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு கற்களையும், செருப்புகளையும் வீசி எறிந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி நடவடிக்கை
இக்கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ''இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன், மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது சாதி, மத வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தூண்டுதலுக்கு அடிபணியாமல் அமைதி மற்றும் நிதானத்தைக் கடைப்பிடித்து எங்களுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.