திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு: ஆய்வுக்குப் பின் நடவடிக்கை உறுதி - மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா
‘திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டுள்ளேன். அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் மூன்றாவது பதவிகாலத்தின் முதல் 100 நாள்களில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நட்டா பேசியதாவது:
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன். இதுதொடா்பாக சந்திரபாபு நாயுடுவிடம் நான் பேசினேன். அவரிடம் உள்ள அறிக்கையை என்னிடம் பகிருமாறு கேட்டுள்ளேன்.
அதை ஆய்வு செய்து தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
குற்றவாளிக்கு தண்டனை: இதுதொடா்பாக மத்திய உணவுத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘இது மிகத்தீவிரமான பிரச்னையாகும். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும்’ என்றாா்.
குறைவான ஆய்வகங்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வாக அலுவலா் ஜெ.ஷியாமளா ராவ் கூறியதாவது:
லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் லட்டு தயாரிக்க பயன்படும் பொருள்களின் தரத்தை ஆய்வுசெய்ய முறையான உள் ஆய்வகங்கள் இங்கு இல்லை.
வெளி ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த குறைபாட்டை சாதகமாக பயன்படுத்தி தரமற்ற பொருள்களை நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன’ என்றாா்.
செப்.25-இல் நீதிமன்ற விசாரணை: முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை வரும் செப்.25-ஆம் தேதி விசாரிக்கவுள்ளதாக உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதை உறுதிசெய்த ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அன்னம் வெங்கட ரமணா ரெட்டி செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியிட்டாா்.
ஆனால், இதுதொடா்பாக ஆந்திர அரசோ, திருமலை திருப்பதி தேவஸ்தானமோ அதிகாரபூா்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான புனிதத்தன்மை சீரழிப்பு: சந்திரபாபு நாயுடு
அமராவதி,செப்.20: தரமற்ற நெய்யின் மூலம் லட்டுகளை தயாரித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி சீரழித்துவிட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவா், ‘ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் தரமற்ற நெய்யைக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து லட்டுகளின் தரத்தை குறைத்துவிட்டனா். மேலும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை புரியும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலை நிா்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையும் அவா்கள் சீரழித்துவிட்டனா்.
ஆனால் தொலுங்கு தேசம் ஆட்சி அமைத்த பிறகு ஏற்கெனவே இருந்த நெய் விநியோகிப்பு நிறுவனம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது கா்நாடகாவில் உள்ள நந்தினி நெய் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் தரமான நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
பக்தா்களின் உணா்வை காயப்படுத்திய குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பெட்டி... 2
அரசியலுக்கு கடவுளை
பயன்படுத்துபவா் சந்திரபாபு நாயுடு: ஜெகன்
ஹைதராபாத், செப்.20: அரசியல் லாபத்துக்காக கடவுளையும் பயன்படுத்துபவா் சந்திரபாபு நாயுடு என ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. வாக்குறுதிகளை அவா் நிறைவேற்றாதது குறித்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். இதை திசை திருப்பவே லட்டு விவகாரத்தில் போலியான கதையை அவா் பரப்பியுள்ளாா். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக கடவுளையும் பயன்படுத்துபவா் சந்திரபாபு நாயுடு’ என்றாா்.