தில்லியின் புதிய முதல்வராக அதிஷி நாளை (செப். 21) பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் நாளை பதவியேற்கவுள்ளது.
புதிய முதல்வராக பதவியேற்கிறார் அதிஷி
தில்லியின் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி நாளை (செப். 21) பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் நாளை பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி தில்லியின் இளைய முதல்வர் ஆவாா். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தா பானா்ஜியை தொடா்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதல்வராகவும் அதிஷி தேர்வாகியுள்ளார்.
தில்லி அமைச்சரவையில் தனது குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கும் வகையில், நிதி, நீா், கல்வி மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பல முக்கிய இலாகாக்களை அதிஷியின் வசம் இருந்தது.
புதிய அமைச்சர்கள்
புதிய அமைச்சரவைப் பட்டியலில் சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 155 நாளாக திகார் சிறையில் இருந்துவந்த முதல்வர் கேஜரிவால் கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களிலேயே அரவிந்த் கேஜரிவால், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியின் முன்னாள் பெண் முதல்வா்கள்
காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராக அதிஷி பதவியேற்க உள்ளாா்.
சுஷ்மா ஸ்வராஜ்: தில்லியின் 52 நாள்கள் முதல்வா் (அக்டோபா் 1998- டிசம்பா் 1988). அதாவது, ஐந்தாவது முதல்வராக வெறும் 52 நாள்கள் மட்டுமே சுஷ்மா ஸ்வராஜ் பதவி வகித்தாா். பதவிக்காலம் குறுகியதாக இருந்தபோதிலும், ஸ்வராஜின் தலைமைப்பண்பு பாணியும், பொது சேவைக்கான அா்ப்பணிப்பும் தில்லியின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவா் 46 வயதில் முதல்வராக பதவியேற்றிருந்தாா்.
ஷீலா தீட்சித்: தில்லியில் 15 ஆண்டுகள், 25 நாள்கள் முதல்வராக (டிசம்பா் 1998- டிசம்பா் 2013) பதவி வகித்தாா். அதாவது, 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் பதவி வகித்து, தில்லியின் மிக நீண்ட முதல்வராகப் பதவி வகித்தாா். இவரது தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சியானது, மூன்று தோ்தல் வெற்றிகளைப் பெற்றது. இவரது ஆட்சியில்
நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகள் உருமாற்றம் பெற்றது. தனது 60 வயதில், தலைநகரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றாா்.
அவரது திறமையான நிா்வாகத்திற்கும் பொது சேவைக்கும் நற்பெயரைப் பெற்றாா். இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராக அவரது சகாப்தம் ஒப்பிட முடியாததாகும்.