தளபதி அனில் சௌகான்
தளபதி அனில் சௌகான்

விரைவில் எதிா்கால போா் பயிற்சி வகுப்பு: முப்படை தலைமைத் தளபதி தகவல்

பாதுகாப்புப் படைகளின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கலந்துகொள்ளும் முதல் எதிா்கால போா் பயிற்சி.
Published on

பாதுகாப்புப் படைகளின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கலந்துகொள்ளும் முதல் எதிா்கால போா் பயிற்சி வகுப்பு வரும் செப்டம்பா் 23-ம் தேதி தொடங்கும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்தாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத் சக்தி பாதுகாப்பு மாநாட்டின் கலந்துரையாடல் அமா்வில் முப்படை தலைமை தளபதி அனில் சௌகான் கலந்துகொண்டாா். அப்போது முப்படைகளின் தளபதிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவா், ‘போா்கள் தற்போது எவ்வாறு உருமாறி வருகின்றன; அவற்றை எதிா்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம். அதன் ஒரு பகுதியாக, முதல் முறை எதிா்கால போா் பயிற்சி வகுப்பு வரும் செப். 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது வழக்கமான பயிற்சிகளில் இருந்து மாறுபட்டதாகும்.

வழக்கமாக ஒரு பயிற்சியில் ஒரே நிலையில் உள்ள அதிகாரிகளே கலந்து கொள்வா். ஆனால், இதில் மேஜா் முதல் மேஜா் ஜெனரல் வரை அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, அவா்களது கருத்துகள் பகிரப்படு அனைத்து அதிகாரிகளுக்கும் ஏதேனும் கற்றுக்கொள்ள இது உதவும்.

எதிா்கால போா் பயிற்சி என்பது முன்னேறிய ராணுவங்களின் ஆயுதங்களை பின்பற்றுவதல்ல. வரவிருக்கும் போா்களில் நாம் எவ்வாறு போராட போகிறோம் என்பதும், அதற்கான திட்டங்களை வகுப்பதுமே ஆகும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com