
ககன்யான் விண்கலத்தை இந்தாண்டு இறுதிக்குள் ஏவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், சந்திரயான் 4 திட்டத்துக்கான பொறியியல் சார்ந்த திட்டப் பணிகளை முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்று வரும் ’ஸ்பேஸ் எக்ஸ்போ 2024’-ஐ இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் சந்திரயான் 4 பற்றி தெரிவித்ததாவது:
“சந்திரயான் 4 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே அடுத்த சில நாள்களில் அப்டேட் கொடுக்கப்படும். தற்போது சந்திரயான் 4 திட்டத்துக்கான பொறியியல் பணிகளை முடித்துள்ளோம்.
சந்திரயான் 3 திட்டத்தில் கலன்கள் மெதுவாக தரையிறங்கியது, தற்போது, நிலாவில் இருந்து திருப்பி கொண்டு வருவது அடுத்த இலக்கு. இதற்காக விண்கலத்தில் 5 தொகுப்புகள் அனுப்பப்பட வேண்டும். அவ்வளவு பெரிய விண்கலத்தை ஏவும் தளம் நம்மிடம் இல்லை. ஆகையால், இரண்டாக பிரித்து ஏவ வேண்டும். இது மிகவும் சவாலானது” என்றார்.
ககன்யான் எப்போது ஏவப்படும்?
ககன்யான் திட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சோம்நாத், ககன்யான் விண்கலம் ஏவத் தயாராக இருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் ஏவ முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், 4 வீரர்களை தரையில் இருந்து 400 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு அனுப்பி, 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ககன்யான் விண்கலம் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் ஏவுவதற்கு முயற்சித்து வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.