விலங்குகளின் கொழுப்புகள் கலந்த நெய்யைக் கொண்டு திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திருப்பதி லட்டின் புனிதம் மீட்கப்பட்டுவிட்டது என்று கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் எக்ஸ் பக்கத்தில், ஸ்ரீவாரி லட்டுப் பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டுவிட்டது என்று பதிவிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, திருப்பதி லட்டுவின் சுவையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, லட்டு தயாரிக்கும் பொட்டு சமையற் கூடத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் கலந்தாலோசித்து, முதல் முறையாக, லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் நெய் சுத்தமானதா என்பதை சோதிக்கும் ஆய்வுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுப்பியிருந்தது.
பரிசோதனை முடிவில், விலங்குகளின் கொழுப்பு நெய்யில் கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சோயாபீன்ஸ், சூரியகாந்தி, பாமாயில் மற்றும் மாடு மற்றும் மீன்களின் கொழுப்பும் கலக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யின் குறியீடு 98.05 முதல் 104.32 ஆக இருக்க வேண்டும். பரிசோதிக்கப்பட்ட நெய்யின் குறியீடு 23.22லிருந்து 116 வரை இருந்தது, விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்குள், ஆய்வகங்கள் இல்லாததை, நெய் விநியோகிப்பாளர்கள் அலட்சியமாக எடுத்துக்கொண்டனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஐந்து தரப்பிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ நெய் விலை ரூ.320 முதல் ரூ.411 வரை வழங்கப்பட்டது. ப்ரீமியர் அக்ரி ஃபூட்ஸ், க்ரிபரம் டெய்ரி, வைஷ்ணவி, ஸ்ரீ பராக் மில்க், ஏஅர் டெய்ரி நிறுவனங்களிலிருந்து நெய் வாங்கப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு ஏஆர் ஃபூட்ஸ் நிறுவனத்தின் 4 நெய் டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டன. உடனடியாக நெய் வாங்குவது நிறுத்தப்பட்டு, தரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வாங்கும் பணி தொடங்கியது. இது குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.