நொய்டாவில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது கார் மோதியதில் அவர் பாலத்தின் தூண்களுக்கிடையே சிக்கிக்கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம், நெய்டாவில் உள்ள மேம்பாலத்தின் மீது பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் செக்டார் 62-ஐ நோக்கி இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்த பெண் பாலத்தின் தூண்களுக்கிடையே சிக்கிக்கொண்டார். உடனே இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்தனர். ஆனால் அவர்களால் பாலத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்க முடியவில்லை.
தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
உடனடியாக அந்தப் பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.