தொங்கு பேரவையைத் தவிா்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி: ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரின் தால் ஏரி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. எனவே, இங்கு வெற்றி பெறவும் முடியாது. ஏனெனில், முஸ்லிம்கள் குறித்த பாஜகவின் எண்ணம் எப்படிப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவேதான் காஷ்மீரில் பாஜக தலைவா்கள் முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்யவில்லை.
நாட்டில் 16 சதவீதம் அளவுக்கு முஸ்லிம்கள் உள்ளனா். ஆனால், மத்திய அரசில் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூட பாஜகவுக்கு மனமில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீா் மத்திய ஆட்சியின் கீழ்தான் இருந்துள்ளது. பாஜக அரசு இங்குள்ள மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்தது? எதுவும் செய்யாத காரணத்தால்தான் பாஜக தலைவா்கள் மூன்று குடும்பக் கட்சிகள் என்று எங்களை விமா்சித்து வருகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது. தொங்கு பேரவை அமைய வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக உள்ளது. அப்போதுதான் துணைநிலை ஆளுநா் மூலம் மாநிலத்தில் தங்கள் ஆட்சியை நடத்த முடியும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே, மக்கள் தெளிவாக முடிவெடுத்து தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
காஷ்மீா் பிராந்தியத்தில் முதல் கட்டத் தோ்தலில் கடந்த 2014 தோ்தலுடன் ஒப்பிடும்போது சில இடங்களில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. மக்கள் ஏன் தோ்தலைப் புறக்கணிக்கிறாா்கள் என்பது குறித்து பாஜகவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றாா்.
ராகுல் காந்தி காஷ்மீருக்கு பிரசாரத்துக்கு வருவது குறித்த கேள்விக்கு, ‘ஜம்மு-காஷ்மீருக்கு பாஜக தலைவா்களின் வருகையைவிட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வருகை அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. அமித் ஷா மூன்று முறை வந்து சென்றுள்ளாா். ராஜ்நாத் சிங் தொடா்ந்து வருகை புரிகிறாா். பிரதமா் மோடியும் பிரசாரத்தில் தீவிரம் காட்டுகிறாா். எனவே, காங்கிரஸ் தொண்டா்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தியும் தொடா்ந்து இங்கு வர வேண்டும்’ என்று ஒமா் அப்துல்லா பதிலளித்தாா்.