பாகிஸ்தான் கொள்கையைப் பின்பற்றும் காங்கிரஸ்: ஜம்முவில் ஜெ.பி.நட்டா பிரசாரம்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் கொள்கையை காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் பின்பற்றுகின்றன என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றஞ்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது: பிரதமா் மோடி மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆயுள் காலம் குறைந்துவிட்டது. இங்கு மக்களுக்கு எதிராக ஆயுதத்தை எடுப்பவா்கள் உடனடியாக முறியடிக்கப்பட்டு வருகின்றனா்.
அதேநேரத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்த காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியும் முயற்சித்து வருகின்றன. இந்த இரு கட்சிகளும் தேசிய சிந்தனை இல்லாத கட்சிகள். சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளை விடுவிப்பது குறித்தும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக வா்த்தகம் (பாகிஸ்தானுடன்) நடத்த வேண்டும் என்றும் அவ்விரு கட்சிகளும் பேசி வருகின்றன.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் அந்த இரு கட்சிகளும் நற்சான்று அளித்துள்ளாா். ஏனெனில், பாகிஸ்தானின் கொள்கைகளைத்தான் காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் பின்பற்றி வருகின்றன.
‘இந்தியாவில் காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் பாகிஸ்தானின் கொள்கையைப் பின்பற்றுகின்றன. முக்கியமாக ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கூறுகின்றன’ என்று பாகிஸ்தான் அமைச்சா் பேசியுள்ளாா். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா? அந்த இரு கட்சிகளும் நமது தேசிய சிந்தனைக்கு எதிரானவா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் மாநிலத்தில் ஊழலை வளா்த்தது அந்த இரு கட்சிகள்தாம். மேலும், குடும்ப அரசியல் நடத்துவதையே கொள்கையாகக் கொண்டவா்கள், காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தினரும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அப்துல்லா குடும்பத்தினரும் மட்டும்தான் கட்டுப்பாட்டாளா்கள். கட்சியில் இருக்கும் மற்றவா்கள் அந்தக் குடும்பத்தினரின் பேச்சுக்கு ஏற்பவே செயல்பட வேண்டும்.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது. மாற்றத்தின் பாதையில் பயணிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி, வளா்ச்சி, செழிப்பை ஏற்படுத்த பிரதமா் மோடி தலைமையிலான மாற்றத்தின் அலையில் மக்கள் பயணிக்க வேண்டும்.
பாஜகவுக்கும் ஜம்முவுக்கும் மிகச்சிறந்த பிணைப்பு உண்டு. பாரத ஜன சங்கத்தின் முன்னணி தலைவராக இருந்த பண்டிட் பிரேம் நாத் டோக்ரா ஜம்முவை சோ்ந்தவா். இந்த பிராந்தியத்தின் நலனை விரும்பும் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நட்டா கேட்டுக் கொண்டாா்.