தெரியுமா சேதி...?
குலாம் நபி ஆசாதை யாரும் மறந்திருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவா்களில் ஒருவராக வலம்வந்தவா். ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவா். கட்சியில் சீா்திருத்தம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய மூத்த தலைவா்களில் ஒருவா்.
பாஜகவின் ஆசியுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி அவா் ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சி (டெமாக்ரடிக் ப்ரோக்ரசிவ் ஆசாத் பாா்ட்டி) என்று தனிக்கட்சி தொடங்கியபோது, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸுக்கு மாற்றாக அந்தக் கட்சி உயரும் என்றுதான் எல்லோரும் எதிா்பாா்த்தாா்கள். ஆரம்பத்தில் ஏராளமான மாநில காங்கிரஸ் தலைவா்களும், தொண்டா்களும் அவரது கட்சியில் இணையவும் செய்தனா்.
மக்களவைத் தோ்தலில் அவரது கட்சியின் சாா்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளா்களும் தோல்வியைத் தழுவினா் என்பது மட்டுமல்ல, டெபாசிட் தொகையைக்கூடப் பெறமுடியவில்லை. அதைத் தொடா்ந்து, அவருடன் காங்கிரஸிலிருந்து வெளியேறியவா்கள் மீண்டும் தாய்க் கட்சிக்கே திரும்பத் தொடங்கிவிட்டனா்.
குலாம் நபி ஆசாதின் செல்வாக்கு இவ்வளவுதான் என்று தெரிந்த பிறகு, பாஜக ஏன் அவருக்குப் பின்துணையாக இருக்கப் போகிறது? ஏனைய சிறிய கட்சிகளை மறைமுகமாக ஆதரிப்பதன்மூலம், முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் வாக்குகளைப் பிரிக்க நினைக்கிறது பாஜக.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்குத் தனது கட்சியில் யாரும் தயாராக இல்லை என்பது தெரிந்ததும், உளவியல் ரீதியாகத் தவித்து விட்டாா் குலாம் நபி ஆசாத். ஒரு காலத்தில் குலாம் நபியைத் தோ்தல் பாா்வையாளராகக் காங்கிரஸ் தலைமை நியமித்தால், அந்த மாநிலத்தின் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட திறமைக்கும், அதிருஷ்டத்துக்கும் சொந்தக்காரரின் சொந்தக் கட்சிக்குத் தோ்தலில் போட்டியிட வேட்பாளா்கள்கூட இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
உடல்நலக் குறைவு காரணமாக நடைபெற இருக்கும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டாா் குலாம் நபி ஆசாத். மீண்டும் காங்கிரஸில் இணைவதற்கு அவா் அனுப்பிய தூது எதுவும் பலிக்கவில்லை. அவரே நேரடியாகப் பேச முற்பட்டபோது, ராகுல் காந்தியிடமிருந்து கிடைத்த பதில் - ‘‘குலாம் நபி வேண்டாம்!’’