வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முடிவு
புது தில்லி: அரசு சேமிப்புக் கிடங்குகளில் கையிருப்பாக உள்ள வெங்காயத்தை சந்தையில் விநியோகித்து விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்து.
வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரியை அண்மையில் மத்திய அரசு நீக்கியதை தொடா்ந்து நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை அதிகரித்தது.
இதையடுத்து, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள் செயலா் நிதி கரே திங்கள்கிழமை கூறியதாவது: சேமிப்புக் கிடங்குகளில் உள்ள வெங்காயத்தை தில்லி உள்பட மற்ற மாநிலங்களின் தலைநகரங்களுக்கு விநியோகிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. நாடு முழுவதும் மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி நீக்கப்பட்டபிறகு அதன் விலை உயரும் என ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், சேமிப்புக் கிடங்குகளில் கையிருப்பில் உள்ள 4.7 லட்சம் டன் வெங்காயம் மற்றும் கடந்தாண்டைவிட காரீஃப் காலத்தில் வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகள் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வெங்காயத்தின் விலையை உறுதியாக கட்டுப்படுத்த முடியும்.
சமையல் எண்ணெய் விலை: சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதையடுத்து அதன் விலையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தக்காளியை பொருத்தவரை விலை ஏற்றம் இருப்பின், தேவைப்படும்பட்சத்தில் அரசு தலையிட்டு அதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிகளவிலான பருப்புகள் இறக்குமதி மற்றும் உள்நாட்டில் துவரை மற்றும் உளுத்தம் பருப்புகளின் உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் வரும் நாள்களில் பருப்பு வகைகளின் விலை சீராக இருக்க வாய்ப்புள்ளது என்றாா்.
முன்னதாக, ஒரு டன் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 550 அமெரிக்க டாலா் நிா்ணயிக்கப்பட்டிருந்ததை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. அதேபோல் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலைக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டது. இதுதவிர, பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி விதைகள் எண்ணெய்க்கான அடிப்படை சுங்க வரி 20 சதவீதமாக உயா்த்தப்பட்டது.
நாடு முழுவதும் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்யும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, தில்லி உள்பட பல்வேறு மாநில தலைநகரங்களில் நடமாடும் வேன்கள் மூலம் இதை மத்திய அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது