டாஸ்மாக் அருகில் இருந்தால்.. தெற்கு ரயில்வேயின் புதிய ஆய்வு முடிவு!

டாஸ்மாக் அருகில் இருக்கும் ரயில்நிலையங்களில்தான் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே ஆய்வு தெரிவிக்கிறது.
ரயில் நிலையம்
ரயில் நிலையம்
Published on
Updated on
1 min read

டாஸ்மாக் மதுபானக் கடைகள் அருகில் இருக்கும் ரயில் நிலையங்களில்தான், ரயில்கள் மீது கல்வீச்சு, ரயில் பயணிகளிடம் திருடுவது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக தெற்கு ரயில்வே சிவப்புக்கொடி காட்டியிருக்கிறது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான ஆய்வில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில், டாஸ்மாக் கடை மற்றும் மதுபானக் கூடங்களின் அருகில் இருக்கும் ரயில் நிலையங்களில்தான், பயணிகளுக்கு மதுபோதையில் தொல்லை கொடுத்தல், ரயில் மீது கல்வீச்சு, ரயில்வே சிக்னல்களில் கோளாறு, பயணிகளின் உடைமைகள் திருடுபோவது போன்ற குற்றங்கள் அதிகமாக நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளதாம்.

இது குறித்து தெற்கு ரயில்வே, 10 நாள்களுக்கு முன்பு அனுப்பிய கடிதம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னையில் 39 இடங்களில், ரயில் நிலையத்திலிருந்து 10 - 200 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்தான் இந்த 39 ரயில் நிலையங்களும் அமைந்துள்ளன.

இந்த 39 ரயில் நிலையங்களிலிருந்து, அதிகமான குற்றங்கள் நிகழ்ந்து, புகார்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக்கில் மதுஅருந்திவிட்டு, தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு மரணமடைவதும் இப்பகுதியில் அதிகமாம்.

  • 39 ரயில் நிலையங்களில், 10 - 200 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகள்.

  • சிக்னல்கள் அருகிலிருக்கும் செப்புக் கம்பிகள் திருடப்படுவது.

  • மதுபாதையில் ரயில் மோதி விபத்து.

  • ரயில் மீது கல் எறியும் சம்பவங்கள்.

  • ரயில்நிலையங்களில் விழுந்து கிடக்கும் போதை நபர்கள்.

பெரம்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, ஆவடி, ஹிந்து கல்லூரி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களும் இதில் அடக்கம்.

இது மட்டுமல்லாமல், அம்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் இரண்டு ரயில் நிலையங்களில், சில டாஸ்மாக் கடைகள், ரயில் தண்டவாள இருப்புப் படைதையை கடக்கும் இடத்துக்கு அருகே அமைந்துள்ளதாம்.

எனவே, இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய, ரயில் நிலையங்களிலிருந்து தொலைவில் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே வலியுறுத்தியிருக்கிறது.

ரயில் நிலையங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் பலரும் மதுபோதையில்தான் குற்றம் செய்வதாகவும், இதனால், பயணிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும், ரயில் நிலையங்களின் காப்பர் கம்பிகளை திருடுவதால், அவ்வப்போது சிக்னல் கோளாறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.