
ரயில் கவிழ்ப்பு சதிச் செயல்களை முறியடிப்பதற்காக மாநில அரசுகள், காவல் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவற்றுடன் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் நகரில் "கவச்' எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கட்டமைப்பின் திறனை ஆய்வு செய்வதற்காக ஜெய்பூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரயில்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்கள் கடமையாகும். ரயில் கவிழ்ப்பு சதிச் செயல்களை முறியடிப்பதற்காக மாநில அரசுகள், காவல் துறைத் தலைவர்கள், மாநில உள்துறைச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் என்ஐஏ-வும் பங்கேற்றுள்ளது. ரயில் விபத்துகளை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் ரயில்வே நிர்வாகமானது ரயில்வே பாதுகாப்புப் படையுடனும் மாநில காவல் துறையுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.