பெங்களூருவில், கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
விசாரணையில், மகாலட்சுமியும், அவரது கணவர் ஹேமந்த் தாசும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தனது மனைவிக்கு வேறொருவருடன் பழக்கம் இருந்ததாகவும், அவர்தான் இந்த கொலைக்குப் பின்னணியில் இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
உத்தரகண்டைச் சேர்ந்த நபருடன், மகாலட்சுமி பழகி வந்ததாகவும், இந்தக் கொலையின் பின்னணியில், அவர் இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் ஹேமந்த் கூறியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு, மகாலட்சுமியின் காதலர் மீது, தான் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தான் அளித்த புகாரை விசாரித்த காவல்துறையினர், மகாலட்சுமியின் காதலரை பெங்களூரு வரக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும், ஆனால் அதன் பிறகு இருவரும் எங்கு சென்றார்கள் என்று எனக்குத் தெரியாது என்றும் ஹேமந்த் கூறியிருக்கிறார்.
முன்னதாக, கொலையாளியின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்று தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
மேலும், குற்றவாளி தொடர்பான தகவல்களை வெளியிடுவதால், அவர் தப்பிச்சென்றுவிடக் கூடும் என்றும், பெண்ணின் மரணம் தொடர்பாக பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். கொலையாளி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.