
நமது சிறப்பு நிருபர்
நாடாளுமன்றம் சட்டப்பேரவைகளைப் போன்று நகராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் முறையான அவை கூட்டத் தொடர் அமர்வுகள் நடைபெற மாநிலங்கள் சட்டமியற்ற வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய பிராந்தியத்தின் இரு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை பேசினார்.
அப்போது அவர் கூறியது: நாடாளுமன்றத்தில், மாநில சட்டப்பேரவைகளில் முறையாக கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதிகள் அவை விவாதங்கள், நிகழ்வுகளில் பங்கேற்க குறிப்பிட்ட கால அமர்வுகள் நடத்தப்படுகின்றன. அதற்கான விதிமுறைகள் உள்ளன. ஆனால், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், போன்ற சில உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது சில கூட்டங்கள் நடைபெற்றாலும், அவற்றுக்கு முறையான ஒழுங்கு முறை இல்லை.
இந்த அமைப்புகளில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை அமைப்புகளில் உள்ள நடைமுறைகளைப் போன்று நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டத் தொடர்கள் குறிப்பிட்ட நாள் அமர்வுகளாக நடைபெறுவதற்கான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான சட்ட முன்வடிவுகளை கொண்டுவந்து மாநில சட்டப்பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்படவேண்டும். இதன் மூலம் உள்ளூர் பிரச்னைகளை இத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் என்றார் ஓம் பிர்லா.
மேலும், நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் உள்ள எண்ம நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் தொழில்நுட்பங்கள்(கணினி தரவு) மூலம் 10 பிராந்திய மொழிகளில் உறுப்பினர்களுக்கு ஆவணங்கள் கிடைக்கச் செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறைகளின் பின்னணியில் சொற்களின் சொற்களஞ்சியம் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. மக்களவைச் செயலகம் இத்தகைய அனைத்து தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுடன் பகிர்ந்து கொண்டு, எண்ம மயமாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
சட்டப்பேரவைகள் தங்கள் செயல்முறைகள், பதிவுகளை எண்ம மயமாக்குகின்றன. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளுக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கின்றன.
இருப்பினும் "ஒரு நாடு, ஒரே எண்ம தளம்' என்ற பார்வையை நனவாக்கும் வகையில், சற்றும் பின்தங்காமல் எண்ம மயமாக்கலின் வேகத்தை மாநில சட்டப்பேரவைகள் அதிகரிக்கவும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 1992-ஆம் ஆண்டுக்கு முந்தைய விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு இரு அவைகளின் சுமார் 18,000 மணி நேர குரல்வழிப் பேச்சு பதிவு செய்யப்பட்டு பயனாளர்கள் எளிதாக அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தலைவரின் பேச்சையும் எந்த தலைப்பிலும் தேடி பெறுவதற்கு இது ஏற்பாடு.
மேலும், கூட்டத்தில் சட்டப்பேரவை தலைவர்கள் நிதி சுயாட்சி, அவை அமர்வுகளின் நாள்கள் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்னைகளை எழுப்பினர். இது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வுகள் காணப்படும். 'ஒரே நாடு, ஒரே தளம்' என்கிற முறையில் பல்வேறு சட்டப்பேரவைகள், மேலவைகளின் விவாதங்கள் "நாடாளுமன்ற (சன்சாத்) எண்ம' தளத்தில் கிடைக்கும்.
அடுத்து 67-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு சிட்னியில் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற இருக்கிறது. இதற்கான கருப்பொருள் குறித்தும் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.