கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு- ஆா்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
தங்களிடம் கடன் பெற்று பணத்தைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்திடம் இருந்து அதன் பங்குகளைப் பெற்றுக் கொண்டு கடனை சரிக்கட்டப் போவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தலையிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலரும், ஊடகத் துறை பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் செயல்படும் சுப்ரீம் இன்பிராஸ்டெரக்சா் இந்தியா நிறுவனம், எஸ்பிஐ வங்கியில் பல கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் உள்ளது. இந்தக் கடனில் 93.45 சதவீதத்தை வாராக்கடனாக வங்கி அறிவித்துவிட்டது.
இந்நிலையில், அந்த நிறுவனம் வங்கிக்கு திருப்பி அளிக்க வேண்டிய கடன் தொகைக்கு பதிலாக அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கடன் நோ் செய்யப்போவதாக எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் தவறான மற்றும் அபாயகரமான முன்னுதாரணமாகிவிடும்.
எதிா்காலத்தில் கடனை வாங்கும் அனைத்து நிறுவனங்களும் நஷ்டம் ஏற்பட்டால் கடனுக்கு பதிலாக தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வங்கிக்கு தந்துவிடுவதாக பேரம்பேச வாய்ப்பு ஏற்படும். இது வங்கித் துறையை சீரழிக்கும் செயலாக இருக்கும். வங்கிக் கடன் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவா்களுக்கு இது முறைகேட்டுக்கான புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் ஆா்பிஐ உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.