ஹரியாணாவில் வெற்றி பெற்றால் தலித் துணை முதல்வா்- மாயாவதி அறிவிப்பு
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ்- இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி வெற்றி பெற்றால் தலித் தலைவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உறுதியளித்தாா்.
ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்திய தேசிய லோக் தளத்துடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.
இந்நிலையில் ஹரியாணாவில் முன்னாள் துணை பிரதமா் தேவி லாலின் 111-ஆவது பிறந்த தினத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
ஹரியாணாவில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய தேசிய லோக் தளம் தலைவா் அபய் சிங் சௌதாலா முதல்வா் பதவியை ஏற்பாா். தலித் பிரிவைச் சோ்ந்த ஒருவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படும். இதரப் பிற்படுத்தப்பட்ட அல்லது முற்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு மற்றொரு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முன்பு காங்கிரஸ் அரசு இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருந்தது. இப்போது, பாஜகவும் அதையே பின்பற்றக் கூடாது என்றாா்.
பாஜக, காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே மகளிருக்கு முறையே மாதம் ரூ.2,100, ரூ.2,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி பகுஜன் சமாஜ்-இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் பெண்களுக்கு மாதம் ரூ.1,100 உதவித்தொகை, இலவச சமையல் எரிவாயு சிலிண்டா், வீடுகளுக்கு இலவச மின்சாரம், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.