மீண்டும் வேளாண் சட்டங்கள்? - காங்கிரஸ் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்டார் கங்கனா

வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் வேளாண் சட்டங்கள்? - காங்கிரஸ் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்டார் கங்கனா
Published on
Updated on
2 min read

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது குறித்து கங்கனா ரணாவத் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கடந்த 2020 ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நீண்ட போராட்டம் நடைபெற்ற நிலையில் மத்திய அரசு இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், 2021-ல் ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கங்கனாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

750 விவசாயிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பிறகும், விவசாயிகளுக்கு எதிரான பாஜக மோடி அரசு செய்த குற்றத்தை உணரவில்லை.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பேசப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துக்கொள்கிறது.

மோடி அரசு, முள்கம்பி, கண்ணீர் புகைக் குண்டுகள், ஆணி, துப்பாக்கி போன்றவற்றைப் பயன்படுத்தி வாகனங்களுக்கு கீழே விவசாயிகளை நசுக்கியதை இந்தியாவின் 62 கோடி விவசாயிகள் என்றும் மறக்கமாட்டார்கள்.

'கிளர்ச்சியாளர்கள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என்று விவசாயிகளை இழிவாகக் கூறிய பிரதமர் மோடி அரசுக்கு இந்த முறை, ஹரியாணா உள்பட தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் தகுந்த பதிலை அளிப்பார்கள்

மோடியின் அறிக்கைகளால், அவரது அமைச்சர்களும், எம்.பி.க்களும், விவசாயிகளை இழிவுபடுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

10 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு மீறியுள்ளது.

-விவசாயிகளின் வருமானம் 2022ல் இரட்டிப்பாகும்.

- சுவாமிநாதன் அறிக்கையின்படி, உள்ளீட்டுச் செலவு + 50% குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்தல்.

- குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அந்தஸ்து.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி அமைத்த குழு குளிர்பதனக் கிடங்கில் இருக்கிறது.

மோடி அரசு, குறைந்தபட்ச ஆதார விலையின் சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்கு எதிரானது.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் அவர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதைக்கூட மோடி அரசு தகுதியாக கருதவில்லை, அதற்கும் ஒருபடி மேலாக விவசாயிகளை இழிவாகப் பேசுகின்றனர்.

விவசாயிகளுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மை பாஜகவின் ஒவ்வொரு நரம்பிலும் உள்ளது என்பது இந்த நாடு முழுவதும் தெரிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கங்கனா ரணாவத், வேளாண் சட்டங்கள் குறித்த தனது கருத்துகளை திரும்பப் பெறுவதாகக் கூறினார்.

'அது என்னுடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை, இதனால் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மன்னிப்பு கோரி இன்று விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மாதமும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com