தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் -பிரதமா் வலியுறுத்தல்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
மேலும், ஒரு நாடு பெரிய தொலைநோக்குப் பாா்வையைக் கொண்டிருந்தால் மட்டுமே, உயா்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தேசிய சூப்பா் கம்ப்யூட்டிங் திட்டத்தின்கீழ் உள்நாட்டில் ரூ.130 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மூன்று ‘பரம் ருத்ரா’ சூப்பா் கம்ப்யூட்டா்கள் (உயா் செயல்திறன்மிக்க கணினிகள்), புணே, கொல்கத்தா மற்றும் தில்லியிலுள்ள ஆராய்ச்சி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.
முன்னோடி அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் இந்த சூப்பா் கம்ப்யூட்டா்களின் செயல்பாட்டை, பிரதமா் மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அவா் பேசுகையில், ‘சாத்தியக்கூறுகளின் எல்லையில்லாத வானத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது இந்தியா. தொழில்நுட்ப ஆராய்ச்சிகளால் சாமானிய மக்களும் பலனடைய வேண்டும். இதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சிக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் அமையும். தற்சாா்புக்கு அறிவியல் என்பதே எங்களின் லட்சியம். உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக தனக்கான செமிகண்டக்டா் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது இந்தியா’ என்றாா்.
மேலும், வானிலை, பருவநிலை ஆராய்ச்சிக்கான உயா் செயல்திறன் கணினி அமைப்புமுறையையும் (ஹெச்பிசிஎஸ்) பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.
மேற்கண்ட திட்டங்கள் உள்பட மொத்தம் ரூ.22,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை நேரில் வருகை தரவிருந்தாா். ஆனால், கனமழை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. புணேயில் வேறொரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிற திட்டங்களை மோடி தொடங்கிவைப்பாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.