திருப்பதி விவகாரம் எதிரொலி: உ.பி. கோயில்களில் இனிப்புகளுக்குத் தடை! பதிலாக...

திருப்பதி லட்டு விவகாரம் எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்டுவரத் தடை.
temple
பிரயாக்ராஜில் உள்ள அலோபி சங்கரி தேவி கோயில்.
Published on
Updated on
1 min read

திருப்பதி லட்டு விவகாரம் எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் உள்ள கோயில்களுக்கு இனிப்புகளுக்குப் பதிலாக பழங்கள், தேங்காய் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதியானதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மற்ற கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களின் தூய்மை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்(அலகாபாத்) மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜில் உள்ள அலோபி சங்கரி தேவி கோயில், அனுமன் கோயில், மங்காமேஷ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து லலிதா தேவி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஷிவ் முராத் மிஸ்ரா கூறுகையில், 'இனி பிரசாதமாக இனிப்பு வழங்கப்படாது என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பக்தர்கள் தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்றவற்றை கொண்டுவருமாறு கூறியிருக்கிறோம்' என்றார்.

மேலும் கோயில் வளாகத்தில் சுத்தமான இனிப்புகளை விற்கும் கடைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேபோல அலோபி சங்கரி தேவி கோயிலில், தலைமை புரவலர் யமுனா புரி மகாராஜ், வெளியில் இருந்து இனிப்புகள், பிரசாதம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மங்காமேஷ்வரர் கோயிலில் மஹந்த் ஸ்ரீதரானந்த் பிரம்மச்சாரி மகராஜ், 'கோயில்களுக்கு வழியே விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் தரத்தை பரிசோதிக்க மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன் தூய்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படும்வரை அவை பிரசாதமாக வழங்கப்படாது' என்றார்.

திருப்பதி லட்டு விவகார எதிரொலியாக இதுபோன்று பல கோயில்களில் பிரசாதங்களின் தூய்மை கண்காணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com