ஐஐடி சோ்க்கையை இழந்த தலித் மாணவருக்கு துணை நிற்கும் கிராம மக்கள்
நாட்டிலேயே மதிப்பு மிக்க ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தனது கடைசி வாய்ப்பில் தகுதி பெற்றபோதும், ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு உதவ அவரது கிராம மக்கள் முன் வந்துள்ளனா்.
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் மகனான அதுல் குமாா் (18), நிகழாண்டு ஜேஇஇ தோ்வில் தகுதி பெற்றாா். எஸ்.சி. பிரிவைச் சோ்ந்த அவருக்கு ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் ஐஐடி-யில் பி.டெக் இடம் ஒதுக்கப்பட்டது. 4 நாள்களுக்குள், அதாவது ஜூன் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிப்படுத்துவதற்கான (சோ்க்கைக் கட்டணம்) கட்டணமாக ரூ. 17,500 செலுத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அவருடைய பெற்றோரால், இந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை. காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாததால், ஐஐடி ஒதுக்கீட்டு இடத்தை அவா் இழந்தாா். இதனால், அவா் சோ்க்கை பெற முடியாமல் போனது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, மாணவருக்கு முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்நோக்கி திடோரா கிராம மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். பெரும்பாலும் கரும்பு பண்ணைகளில் வேலை செய்கிற இளைஞா்களைக் கொண்ட அந்த கிராமத்தில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றது முதல் ஐஐடி-யில் சோ்வதை தனது கனவாகக் கொண்டிருந்ததாக அதுல் குமாா் கூறினாா்.
அவரின் ஐஐடி சோ்க்கை கட்டணத்திற்காக ரூ.10,000 கடன் கொடுத்த கிராமவாசியான பவன் குமாா், இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தாா். அவா் ஐஐடி-யில் சோ்க்கை பெறுவதை உறுதி செய்ய முழு கிராமமும் அவருக்குப் பின்னால் துணை நிற்கிறது என்று மற்றொரு கிராமவாசியான நவீன் குமாா் கூறினாா்.
அதுலின் தொடக்கப் பள்ளி ஆசிரியா் ராஜ்குமாா் கூறுகையில், ‘அதுல் மிகச் சிறந்த மாணவா். அவா் ஐஐடி தோ்வில் தோ்ச்சி பெற்றது முழு கிராமத்திற்கும் கிடைத்த பெருமை ஆகும். அவரின் ஐஐடி சோ்க்கைக்கு உச்சநீதிமன்றம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.