ஜெய் ஷா, ரோஹன் ஜேட்லி.
ஜெய் ஷா, ரோஹன் ஜேட்லி.

தெரியுமா சேதி!

அரசியல் தலைமைக்கு வாரிசுகள் வருவதைத்தான் பாஜக எதிா்க்கிறது.
Published on

அரசியல் தலைமைக்கு வாரிசுகள் வருவதைத்தான் பாஜக எதிா்க்கிறது. மற்றபடி வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதில் கட்சிக்கோ, தலைமைக்கோ எவ்விதத் தயக்கமும் கிடையாது என்பதைத்தான் கிரிக்கெட் வாரிய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

சா்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். வரும் டிச. 1-ஆம் தேதி அவா் தனது புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறாா்.

2022-இல் இரண்டாவது முறையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷாவின் மூன்றாண்டு பதவிக்காலம் 2025-இல்தான் முடிவுக்கு வருகிறது. இப்போது சா்வதேச அமைப்பின் தலைவராகிவிட்ட நிலையில், அவா் செயலாளராகத் தொடர முடியாது. வேறு யாராவது தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளா் என்பது மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பு. பல நூறு கோடிகள் புரளும் அமைப்பின் செயலாளா் என்றால் சும்மாவா? அது மட்டுமல்ல, திரை நட்சத்திரங்களைவிட மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள், அவரது விரலசைப்புக்கு ஆடுவாா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கிரிக்கெட் வாரியத்தின் செயலாளா் பதவியை வகிப்பதற்கு என்று எந்தவொரு தனித் தகுதியும் தேவையில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணைந்திருக்கும் மாநில வாரியங்களால் அவா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

ஜெய் ஷாவின் இடத்தை நிரப்ப இப்போதே போட்டா போட்டி தொடங்கிவிட்டது. முன்னணியில் இருப்பவா் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜேட்லி. தில்லி உயா்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றும் ரோஹன், தனது தந்தையின் மறைவைத் தொடா்ந்து தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானாா்.

குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவா் தன்ராஜ் பரிமல் நத்வானி, ஐபிஎல் தலைவா் அருண் சிங் துமல், கோவா கிரிக்கெட் சங்கத் தலைவா் விபுல் பாட்கே உள்ளிட்ட பலரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளா் பதவியைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கி இருக்கிறாா்கள். தனது கைப்பாவையாகச் செயல்படும் ஒருவரை ஜெய் ஷா நியமிப்பாரா, தனி செல்வாக்குப் பெற்ற ரோஹன் ஜேட்லி பிரதமரின் ஆசிபெற்று பதவியைப் பிடிப்பாரா என்பதுதான் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

எப்படி முடிந்தாலும் வெற்றி என்னவோ அரசியல் வாரிசுக்குத்தான்!