குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தினர் அனைவரும் சமுதாய சமையலறை மூலம் ஒன்றாக உணவு சமைத்து சாப்பிடுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு கிராமத்திலுள்ள அனைவருக்கும் ஒரே சமையலறை என்பது சாத்தியமா?
சாத்தியமே என்கிறது குஜராத்திலுள்ள சந்தங்கி கிராமம். இந்தக் கிராமத்தில் அனைவரும் தங்களது வீட்டில் சமைப்பது இல்லை. மாறாக சமுதாய சமையலறை மூலம் பொதுவாக சமைத்து உண்டு வாழ்கின்றனர். வயதானவர்களிடையே காணப்படும் தனிமையைப் போக்க இந்த முறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இளவயதினர் பலரும் நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றதால் முன்பு 1,100 பேர் வசித்த கிராமத்தில் தற்போது 500 பேர் மட்டுமே வசித்து வருவதாகவும், அதில் பலரும் வயது மூத்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சந்தங்கி கிராமத்தின் முக்கிய சிறப்பம்சமாக விளங்கும் சமுதாய சமையலறையில் மாதம் ரூ. 11,000 சம்பளத்தில் சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி இருவேளை உணவு தயாரிக்கப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவுக்கு மாதத்திற்கு ஒரு நபருக்கு தலா ரூ.2,000 பணம் செலுத்துகின்றனர்.
இந்த முன்னெடுப்பில் கிராமத் தலைவர் பூனம்பாய் படேல் முக்கியப் பங்கு வகித்துள்ளார். நியூயார்க்கில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அகமதாபாத்தில் வசித்த தனது வீட்டை விட்டு சந்தங்கி கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அவரது முன்னெடுப்பால் இந்த கூட்டுமுயற்சி சாத்தியமாகியுள்ளது. இதனால், சந்தாங்கி கிராமத்தினர் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்று அவர் கூறுகிறார்,
இங்கு சமைக்கப்படும் உணவு கிராம மக்கள் கூடும் இடமான சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்கும் குளிர்சாதன வசதியுடைய அரங்கத்தில் பரிமாறப்படுகிறது. இந்த அரங்கம் வெறும் உணவு பரிமாற மட்டும் பயன்படுத்தப்படாமல், மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சமுதாய சமையலறைத் திட்டம் அனைவருக்கும் ஒத்துவருமா என்ற யோசனை ஆரம்பத்தில் இருந்துள்ளது. ஆனால், நாளடைவில் இதனால் பெரும்பாலானோர் பயனடைவதைக் கண்டு கிராம மக்கள் பலரும் இணைந்துள்ளனர். இந்த சமையலறைத் திட்டம் அவர்களின் தனிமையைப் போக்குவது மட்டுமின்றி தினசரி தனித்தனியே உணவு சமைத்து உண்பது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதன்மூலம், அந்த மக்களுக்கு ஓய்வும், பிற வேலைகளில் ஈடுபடுவதற்கான நேரம் அதிகமாகவும் கிடைக்கின்றது.
இந்தத் திட்டத்தால் அருகாமை கிராம மக்களும் கவரப்பட்டுள்ளனர். சந்தங்கி கிராமத்தில் உள்ள இந்த முறையை பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இதேபோன்ற பிரச்னைகள் உள்ள பல கிராமங்களுக்கு சந்தங்கி ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.
சந்தங்கி கிராம மக்களின் உடல்நிலைகளிலும் இந்தத் திட்டம் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தினசரி ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் மக்களின் உடல்நலன் பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது. அனைவரும் ஒன்றுகூடி உண்பதால் மக்களின் மனநிலையிலும் ஆரோக்கியமான பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தங்கி கிராமத்தின் சமுதாய சமையலறை திட்டம் சிறிய யோசனையால் பல சமூக மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்பதை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது. இதன்மூலம், சமூக ஒற்றுமைக்கான முக்கிய இடமாகவும் சந்தங்கி கிராமம் விளங்குகிறது.