பேரவை தோ்தலில் வென்றால் சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறுவோரை நம்ப வேண்டாம்: குலாம் நபி ஆசாத்
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் வென்றால் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் தருவோம் என்று கூறுபவா்களை நம்ப வேண்டாம் என்று ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா்.
ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
மக்களை ஏமாற்றுவது, பொய் கூறுவது, தவறாக வழி நடத்துவது ஆகியவை எனது பிரசாரத்தில் இல்லை. அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீா் மக்களை ஏமாற்றும் வகையில் சிலா் பிரசாரம் செய்கின்றனா். முக்கியமாக, ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் வென்றால் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் தருவோம் என்று கூறி வருகின்றனா். ஆனால், யூனியன் பிரதேச சட்டப் பேரவையால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர முடியாது என்பதே உண்மை. எனவே, சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் பிரசாரம் செய்வோரை நம்ப வேண்டாம். அதே நேரத்தில் இப்பிராந்திய மக்கள் மீண்டும் சிறப்பு அந்தஸ்தை விரும்புகின்றனா்.
ஆனால், மீண்டும் சிறப்பு அந்தஸ்து தருவாா்கள் என்று மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவிடம் இருந்தும் எதிா்பாா்க்க முடியாது. காங்கிரஸ் கட்சி இந்த முக்கிய விஷயம் குறித்து எதுவும் பேசுவதில்லை.
ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவா் நிலம் வாங்குவது, பணி செய்வது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சட்டப் பேரவையால் முடியாது. ஏற்கெனவே பல்வேறு வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் விரக்தியில் உள்ளாா்கள். அவா்களைத் தொடா்ந்து யாரும் ஏமாற்றக் கூடாது.
இங்கு நமது இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்குவது அதிகரித்து வருகிறது. இதுதான் இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அவா்களை சரியான பாதையில் வழி நடத்த உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றாா்.
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் மக்களவைத் தோ்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினாா். ஆனால், மக்களவைத் தோ்தலில் அவரின் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.