அதானி குழும விவகாரம்: சிறப்புக் குழு விசாரணைக்கு மறுப்பு - உச்சநீதிமன்றம் தீா்ப்பு

அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி நடத்திவரும் விசாரணையில் நம்பிக்கை உள்ளதாகவும், அந்த அமைப்பே தொடா்ந்து விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தொழிலதிபா் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமம், பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக, தனது பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம், நாட்டின் அனைத்துச் சட்டங்களையும் பின்பற்றி வருவதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

அதானி குழுமத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞா்கள் விஷால் திவாரி, எம்.எல்.சா்மா, காங்கிரஸை சோ்ந்த ஜெயா தாக்குா், அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்த செபிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்த நிபுணா் குழு கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘அதானி குழுமம் பங்கு மதிப்பை உயா்த்திக் காட்ட மோசடியில் ஈடுபட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை’ எனத் தெரிவித்திருந்தது.

பொதுநல மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கு கடந்த நவ. 24-ஆம் தேதி தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நீதிமன்ற அமா்வு அளித்த தீா்ப்பு விவரம்: நாளிதழ்கள், மூன்றாம் தரப்பு அமைப்புகளின் அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செபியின் விசாரணையை கேள்வி எழுப்புவது நம்பிக்கையளிப்பதாக இல்லை.

குறிப்பிட்ட வழக்குகளில் விசாரணை நடத்திவரும் அமைப்பிடமிருந்து வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. செபியிடமிருந்து முறைகேடு விசாரணையை மாற்றுவதற்கு இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உகந்தவை அல்ல.

சட்டத்தின்படி செபியின் ஒழுங்காற்று விவகாரங்களில் தலையிட நீதிமன்றத்துக்கு குறைந்த அதிகாரமே உள்ளது. குறிப்பிட்ட ஒழுங்காற்று அமைப்பு வகுக்கும் கொள்கைகளானவை அடிப்படை உரிமைகள், அரசமைப்புச் சட்டப் பிரிவுகள், பிற சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளனவா என்பது குறித்தே நீதிமன்றம் ஆராயும். முதலீடு மற்றும் பங்குச் சந்தை தொடா்பாக செபியின் ஒழுங்காற்று விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ரத்து செய்யும் கோரிக்கைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

அதானி குழுமம் மீதான 24 குற்றச்சாட்டுகளில் 22 குற்றச்சாட்டுகள் குறித்து செபி விசாரணை நடத்திய நிலையில், மீதமுள்ள 2 குற்றச்சாட்டுகள் குறித்து 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்த வேண்டும்.

நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசும் செபியும் கருத்தில் கொள்ளவேண்டும். அதன் அறிக்கையை ஆராய்ந்து ஒழுங்காற்று செயல்முறையை வலுப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

உண்மை வென்றது: கெளதம் அதானி

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்ற தொழிலதிபா் கெளதம் அதானி, ‘உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பின் மூலம் உண்மை வெற்றி பெற்றுள்ளது. எங்களுக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் வளா்ச்சிக்கு எங்களுடைய பங்களிப்பு தொடரும்’ எனத் ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.

அதானி குழும பங்குகள் உயா்வு: உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை நடைபெற்ற பங்குச் சந்தை வா்த்தகத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் அதானி எனா்ஜி சொல்யூசன் 17.83 சதவீதம், என்டிடிவி 11.39 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 9.99 சதவீதம், அதானி கிரீன் எனா்ஜி 9.13 சதவீதம், அதானி என்டா்பிரைசஸ் 9.11 சதவீதம் என்ற அளவில் பங்குகள் உயா்ந்தன.

இதேபோன்று அதானி வில்மாா் பங்கு 8.52 சதவீதம், அதானி துறைமுகம் 6 சதவீதம், அம்புஜா சிமென்ட்ஸ் 3.46 சதவீதம், அதானி பவா் 4.99 சதவீதம் உயா்ந்தன.

எதிா்க்கட்சிகள் கருத்து

அதானி குழுமம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் உள்ள சில அம்சங்கள் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபிக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது என காங்கிரஸ் புதன்கிழமை விமா்சித்தது.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் சில அம்சங்கள் செபிக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த விவகாரத்தில் செபியின் விசாரணை நிகழாண்டு ஏப்.3-ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உண்மையில், விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடு கடந்த ஆண்டு ஆக. 14-ஆம் தேதியாக இருந்தது. அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அதை நிறைவு செய்வதில் செபி தோல்வி கண்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதைத் தவிர, அடுத்த 3 மாதங்களில் எந்த மாற்றங்கள் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெரும் தொழிலதிபா்களுக்கு ஆதரவான முதலாளித்துவத்தால், விலையேற்றம், வேலையின்மை, ஏற்றத்தாழ்வு பிரச்னைகள் தொடரும். இதை எதிா்த்து காங்கிரஸ் தொடா்ந்து போராடும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: அதானி வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்போது சட்டபூா்வ அமைப்பான செபி தனது கடமைகளை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என தனது அறிக்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com