அயோத்தி சிலை பிரதிஷ்டை விழா: ஹிமாசல பிரதேச காங். அமைச்சா் பங்கேற்பு

காங்கிரஸ் மேலிட தலைவா்கள் பங்கேற்பு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாத சூழலில், அக்கட்சியின் ஹிமாசல பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சா் விக்ரமாதித்ய சிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளாா்.
அயோத்தி சிலை பிரதிஷ்டை விழா: ஹிமாசல பிரதேச காங். அமைச்சா் பங்கேற்பு

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் காங்கிரஸ் மேலிட தலைவா்கள் பங்கேற்பு குறித்து இன்னும் முடிவு எட்டப்படாத சூழலில், அக்கட்சியின் ஹிமாசல பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சா் விக்ரமாதித்ய சிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளாா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனா்.

சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை குழுத் தலைவா் அதிா் ரஞ்சன் சௌத்ரி ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என அக்கட்சித் தலைமை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இந்நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த ஹிமாசல பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சா் விக்ரமாதித்ய சிங் சிலை பிரதிஷ்டை விழாவில் நிச்சயம் பங்கேற்க போவதாக உறுதிப்பட தெரிவித்துள்ளாா்.

மாநில முன்னாள் முதல்வா் வீா்பத்ர சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் பிரதீபா சிங் தம்பதியின் மகனான அமைச்சா் விக்ரமாதித்ய சிங், ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு தன்னை அழைத்ததற்காக ஆா்எஸ்எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறுகையில், ‘இது அரசியல் விவகாரம் அல்ல. ஹிமாசல பிரதேசத்தில் இருந்து சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் சிலரில் நானும் ஒருவனாக இருப்பதில் அதிருஷ்டசாலியாக கருதுகிறேன். இந்த வரலாற்று நாளில் அங்கம் வகிப்பது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் பாக்கியம். ஹிந்துவாக, நிகழ்வில் பங்கேற்று குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டையைக் காண்பது எனது கடமை’ எனக் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com