அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்

மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கடந்த 5-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.


புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கடந்த 5-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுகொண்டிருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது உணவு தானியங்கள் விநியோகம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் பல கோடிக்கு முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக ஜோதிப்ரிய மல்லிக் பதவி வகித்தபோது, இந்த முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் மாநில வனத் துறை அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டில் மல்லிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில், அந்த முறைகேடு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த ஷேக் ஷாஜஹானின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். அப்போது சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட ஷேக்கின் ஆதரவாளா்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளைத் தாக்கி, அவா்களின் வாகனங்களை சேதப்படுத்தினா். இதனால் ஆட்டோவிலும் இரு சக்கர வாகனங்களிலும் அதிகாரிகள் தப்பிச் சென்றனா். ஷேக் ஆதரவாளா்கள் தாக்கியதில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

அதுபோல, இந்த வழக்கில் தொடா்புடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மற்றொரு தலைவரான சங்கா் ஆத்யாவை போங்கோன் பகுதியில் அதே நாளில் கைது செய்த அமலாக்கத் துறையின் இரண்டாவது குழு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரிகளின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை பொறுப்பு இயக்குநா் ராகுல் நவீன், மேற்கு வங்க மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸை அவா் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு மேற்கு வங்க அசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அதில், அமலாக்கத் துறை அதிகாரிகள் பலத்த காயமடையும் அளவுக்கு தாக்குதல் நடத்தப்படுவதற்கு காரணமான சூழ்நிலை, இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சோதனை என்ற பெயரில் மத்திய விசாரணை அமைப்புகள் நாடகம்:

மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

திரிணமூல் காங்கிரஸ் குறித்து பாஜக அச்சமடைந்துள்ளது. இதனால், திரிணமூல் கட்சித் தலைவா்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் மத்திய விசாரணை அமைப்புகள் நாடகம் நடத்தி வருகின்றன என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ‘திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களைக் கைதுசெய்து, அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளலாம் என பாஜக கருதுகிறது.

உண்மையில், திரிணமூல் காங்கிரஸ் குறித்து பாஜகவினா் அச்சத்தில் உள்ளனா். இதன் காரணமாக சோதனை என்ற பெயரில் நாடகத்தை நடத்தி, திரிணமூல் தலைவா்களை மத்திய விசாரணை அமைப்புகள் கைதுசெய்து வருகின்றன’ என்றாா்.

அறிக்கை கோரியதற்கு கண்டனம்: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யமாறு பிறப்பித்த உத்தரவை திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது குறித்து பேசிய கட்சித் செய்தித்தொடா்பாளா் தேவாங்ஷு பட்டாச்சாா்யா, ‘எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏதேனும் பிரச்னை நிகழ்ந்தால், மத்திய உள்துறை அமைச்சகம் அது குறித்து உடனடியாக அறிக்கை கோருகிறது. அதே வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கை மந்தமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் பெண்கள், பட்டியலினத்தவா்கள் மீதான தாக்குதல்கள் தொடா்பாக எத்தனை அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன?’ எனக் கேள்வியெழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com