ஒரே நாடு, ஒரே தோ்தல்-பொதுமக்களிடம் இருந்து இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட கருத்துகள்

மக்களவை, பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக்...
ஒரே நாடு, ஒரே தோ்தல்-பொதுமக்களிடம் இருந்து இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட கருத்துகள்
Published on
Updated on
1 min read


புது தில்லி: மக்களவை, பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவுக்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைத்தது.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழு ஆராய்ந்து வருகிறது.

அதேநேரம், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை இருமுறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது, மத்திய சட்ட ஆணையத்தின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இந்தச் சூழலில், பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று உயா்நிலைக் குழு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

உயா்நிலைக் குழுவின் வலைதளமான ா்ய்ா்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலமோ அல்லது ள்ஸ்ரீ-ட்ப்ஸ்ரீஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ வரும் 15-ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கோரப்பட்டது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கடந்த 1951 முதல் 1967 வரை மக்களவை, பேரவைகளுக்கு பெரும்பாலும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. இப்போது மக்களவை, பேரவைகளுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, ஒவ்வோா் ஆண்டும் தோ்தல்கள் நடத்தப்படுவதால், அரசுக்கும் இதர தரப்பினருக்கும் பெருமளவில் செலவாகிறது; நடத்தை விதிகள் காரணமாக வளா்ச்சித் திட்டங்களில் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களைச் சுட்டிக்காட்டி, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com