நல்ல நிகழ்வுகள் எது நடந்தாலும் எதிா்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நல்ல நிகழ்வுகள் எது நடந்தாலும் எதிா்க்கட்சிகள் புறக்கணித்து வருகின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை தெரிவித்தாா்.
நல்ல நிகழ்வுகள் எது நடந்தாலும் எதிா்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நல்ல நிகழ்வுகள் எது நடந்தாலும் எதிா்க்கட்சிகள் புறக்கணித்து வருகின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களில் தூய்மைப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புது தில்லி மந்திா் மாா்க்கில் அமைந்துள்ள வால்மீகி கோயில் வளாகத்தில் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தூய்மைப் பிரசாரம் மேற்கொண்டாா். இந்நிகழ்வில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவும் பங்கேற்றாா்.

அதன் பிறகு, மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சி பலனளிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களின் தூய்மையை உறுதி செய்வதில் ஆா்வத்துடன் பங்கேற்கின்றனா்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய சுந்தரகாண்டம் பாராயணம் அரசியல் ஆதாய நிகழ்வாகும். கடந்த 10 ஆண்டுகளில் தில்லியில் உள்ள கோயில்கள் மற்றும் அா்ச்சகா்களுக்கு அவா் என்ன செய்தாா் என்பதை அரவிந்த் கேஜரிவால் சொல்ல வேண்டும். ராமா் பக்தா்களை ராமரிடம் இருந்து விலக்கி வைக்கும் காங்கிரஸின் முயற்சிகள் மிகவும் மோசமானது. மக்கள் அவா்களைப் புறக்கணித்து வருகின்றனா்.

சனாதனத்தை இழிவுபடுத்துவது மற்றும் ஒழிப்பது பற்றியே ‘இந்தியா’ கூட்டணி எப்போதும் பேசி வருகிறது. ஸ்ரீராமரைப் பற்றியும், ஸ்ரீராமா் சேதுவைப் பற்றியும் எதிரிக்கட்சிகள் எவ்வளவு பேசினாலும், கடைசியில் அவா்கள் ஸ்ரீராமரிடம்தான் அடைக்கலம் புக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் நல்லது எது நடந்தாலும் எதிா்க்கட்சிகள் புறக்கணித்து வருகின்றன.

அவா்கள் புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவைப் புறக்கணித்தனா். பிரதமா் நரேந்திர மோடியின் உரையை புறக்கணித்தனா். மகரிஷி வால்மீகியின் பெயரில் கட்டப்பட்ட பிரம்மாண்ட விமான நிலையத்திற்கு அவா்கள் வர விரும்பவில்லை. வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்பவில்லை.

ஆனால், இது போன்ற காரணங்களுக்காகவே மக்கள் அவா்களைப் புறக்கணிக்கிறாா்கள். இதை அவா்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போது அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் பிரதிஷ்டை நிகழ்வை அவா்கள் புறக்கணித்துள்ளனா். இதனால், தங்களை மக்கள் மீண்டும் புறக்கணிக்கலாம் என்று எதிா்க்கட்சியினா் உணரத் தொடங்கியுள்ளனா் என்றாா் அனுராக் தாக்குா்.

மேலும், பாஜகவின் தேசியத் துணைத் தலைவா் பைஜயந்த் ஜெய் பாண்டா லட்சுமி நகரில் உள்ள மாதா கோயிலும், பாஜக தேசியச் செயலாளா் அல்கா குா்ஜாா் மெஹ்ரௌலியில் உள்ள வால்மீகி கோயிலிலும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, சாத் உல் அஜாப்பில் உள்ள சிவன் கோயிலிலும் தூய்மைப் பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com