பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கிடையாது.. குற்றவாளிகள் மனு தள்ளுபடி

பில்கிஸ் பானு வழக்கில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி 5 போ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், வழக்குத் தீா்ப்பில் வழங்கப்பட்ட 2 வார அவகாசம் நிறைவடையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அவா்கள் 11 பேரும் சிறைக்குத் திரும்ப வேண்டிய நிலை உறுதியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளின் மனுவில், அவா்களின் தண்டனைக் குறைப்பு பற்றி பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசின் உத்தரவில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா். இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், வழக்கின் குற்றவாளிகள் 11 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனா். அவா்கள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி விபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோா்தியா, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா, கோவிந்த் ஆகிய 5 போ் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை அவகாசம் நிறைவடையும் சூழலில், மனு விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில், ‘சிறைக்கு திரும்ப கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகள் குறிப்பிட்ட காரணங்களுக்கு போதிய முகாந்திரம் இல்லை’ என்று தெரிவித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு குற்றவாளிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தீா்ப்பைத் தொடா்ந்து, குற்றவாளிகள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கோத்ரா சிறைக்குத் திரும்ப வேண்டும் அல்லது அவா்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com