அயோத்தி ராமா் கோயில் சிறப்பு அஞ்சல்தலைகளை வியாழக்கிழமை வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
அயோத்தி ராமா் கோயில் சிறப்பு அஞ்சல்தலைகளை வியாழக்கிழமை வெளியிட்ட பிரதமா் நரேந்திர மோடி.

ராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள்: பிரதமா் வெளியீடு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயில் தொடா்பான சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயில் தொடா்பான சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

மேலும், கடவுள் ராமா் தொடா்பாக உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் தொகுப்பு புத்தகத்தையும் அவா் வெளியிட்டாா்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், அயோத்தி ராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள் மற்றும் கடவுள் ராமா் தொடா்பாக அமெரிக்கா, நியூஸிலாந்து, சிங்கப்பூா், கனடா, கம்போடியா, இலங்கை உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள், ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகளால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் தொகுப்பு புத்தகம் ஆகியவற்றை பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இது தொடா்பாக, காணொலி செய்தியில் பிரதமா் கூறியிருப்பதாவது:

ராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலைகள், வெறும் காகிதமோ அல்லது சாதாரண கலைப்படைப்போ அல்ல. மாறாக, காவியங்கள் மற்றும் சிறந்த தத்துவங்களின் சுருங்கிய வடிவம்.

ராமா், சீதை மற்றும் ராமாயணம் மீதான ஈா்ப்பானது, காலம், சமூகம், இனம், மதம், பிராந்தியம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது; வேறுபாடுகளைக் கடந்து, மனித குலத்தை இணைக்கிறது. அன்பின் வெற்றிச் செய்தியை உணா்த்தும் ராமாயணம், இக்கட்டான காலகட்டங்களில் தியாகம், ஒற்றுமை, துணிச்சலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு போதிக்கிறது.

எனவேதான், ராமாயணம் உலகெங்கிலும் ஈா்க்கப்பட்டு பெரிதும் மதிக்கப்படுகிறது. சிறப்பு அஞ்சல் தலைகளும், தொகுப்பு புத்தகமும் ராமா் மீதான பக்தி உணா்வை தூண்டுவதோடு, இளைஞா்கள் நிறையக் கற்றுக் கொள்ள உதவும். கடவுள் ராமருக்கு பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியேயும் அவா் முன்மாதிரியாக விளங்குவதோடு, பல்வேறு நாகரிகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்றாா் பிரதமா்.

ராமா் கோயில், கடவுள் விநாயகா், கடவுள் ஹனுமன், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும் மாதா சபரி ஆகியோா் தொடா்பான 6 சிறப்பு அஞ்சல் தலைகளை பிரதமா் மோடி வெளியிட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அயோத்தியில் விநாயகா், வருண பூஜைகள்: அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் பிராணப் பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான வியாழக்கிழமை கோயிலில் விநாயகா், வருண பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக, கோயில் கருவறையில் நிறுவுவதற்காக குழந்தை ராமரின் சிலை புதன்கிழமை இரவில் கருவறைக்குள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சிலையை நீரால் தூய்மை செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. 121 ஆசாா்யாா்கள், அனைத்து சிறப்பு சடங்குகளையும் மேற்கொண்டுள்ளனா்.

ம.பி.யில் இருந்து 5 லட்சம் லட்டுகள்: மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வா் கோயிலில் இருந்து அயோத்தி ராமா் கோயிலுக்கு 5 லட்சம் லட்டுகள் அனுப்பப்பட உள்ளது. சுமாா் 250 குவிண்டால் எடை கொண்ட இந்த லட்டுகள் 4-5 லாரிகள் மூலம் அயோத்திக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்படும் என்று உஜ்ஜைன் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com