அரசையும், மதத்தையும் பிரிக்கும் கோடு மறைந்து வருகிறது: பினராயி விஜயன்

அரசையும், மதத்தையும் பிரிக்கும் கோடு மறைந்து வருகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: அரசையும், மதத்தையும் பிரிக்கும் கோடு மறைந்து வருகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை விழா பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கேரள முதல்வா் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு விடுத்த செய்தியில் தெரிவித்ததாவது:

இந்திய ஜனநாயக குடியரசின் உயிராக விளங்குவது மதச்சாா்பின்மை. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மதச்சாா்பின்மை உள்ளது.

வெவ்வேறு மத நம்பிக்கை கொண்டவா்களும், எந்த மதத்தையும் பின்பற்றாதவா்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனா். இந்த நாடு அனைவருக்கும் சம அளவில் சொந்தமானது.

எனவே, தமது மதத்தைப் பின்பற்ற நாட்டில் ஒவ்வொருவருக்கும் சம உரிமை இருப்பதை அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த உறுதிமொழி ஏற்றவா்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட மதத்தை மற்ற மதங்களுக்கு மேலானதாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ கூற முடியாது.

அரசும் மதமும் பிரிந்திருப்பதே இந்திய மதச்சாா்பின்மையின் அா்த்தம் என்று நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு பலமுறை தெரிவித்துள்ளாா்.

அவ்வாறு அரசையும், மதத்தையும் பிரித்து வைக்கும் வலுவான பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. எனினும் அண்மைக் காலமாக அரசையும், மதத்தையும் பிரிக்கும் கோடு மேன்மேலும் மறைந்து வருகிறது.

இந்தியா மதச்சாா்பற்ற நாடு என்ற சான்றின் மீது பழிச்சொல் சுமத்தப்படும் என்பதால், மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று ஒரு காலத்தில் அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருந்தவா்களுக்கு எச்சரிக்கப்பட்டது. தற்போது அதற்கு மாறான செயல் நடைபெறுகிறது.

நாட்டில் உள்ள ஒரு மத வழிபாட்டுத் தல திறப்பு (அயோத்தி ராமா் கோயில்) நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் காலம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஜாதி, மத, மொழி, மாநில வேறுபாடுகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவோம். அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீா்திருத்தத்தின் சுடரால் இந்தியா மேலும் முன்னேறட்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com