ரத்தப் புற்றுநோய் பாதித்த சிறுவனைக் கொன்ற மூட நம்பிக்கை

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன், பெற்றோரின் மூட நம்பிக்கைக்கு பலியாகியிருக்கிறார்.
ரத்தப் புற்றுநோய் பாதித்த சிறுவனைக் கொன்ற மூட நம்பிக்கை


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன், பெற்றோரின் மூட நம்பிக்கைக்கு பலியாகியிருக்கிறார்.

ரத்தப் புற்றுநோய் பாதித்து, 5 வயது சிறுவன் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே அவரை கங்கை நதியில் ஐந்து நிமிடம் குளிக்கவைத்தால், அவரது நோய் குணமடையும் என்ற மூட நம்பிக்கையால், சிறுவன் ஹரித்வார் அழைத்து வரப்பட்டார்.

சாதாரண காலத்தில் என்றால் கூட பரவாயில்லை.. நடுங்கும் குளிர் காலத்தில் ஐந்து வயது சிறுவனை, கங்கை நதிக்குள் 5 நிமிடம் மூழ்கவைத்திருக்கிறார்கள். பெற்றோருடன் வந்த உறவினர் பெண் சிறுவனை கங்கையில் மூழ்கவைக்க, அப்போது சில மந்திரங்களையும் பெற்றோர் உச்சரித்துள்ளனர். கங்கையிலிருந்து வெளியே வரும் போது சிறுவன் நோயிலிருந்து குணமடைந்துவிடுவான் என்று நினைத்த பெற்றோருக்கு, அவன் சடலமாக மீட்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிலரால் விடியோ எடுக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. சிறுவன் மேலே இழுக்கும்படி கோரியும் பெற்றோர் அவனைக் காப்பாற்றவில்லை. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு, பெற்றோரை தள்ளிவிட்டு சிறுவனை மேலே எடுத்த போது, சிறுவன் உயிரற்ற சடலமாகத்தான் மேலே வந்தான்.

அந்த விடியோவில், சிறுவனை மேலே எடுக்கும்போது, உடன் வந்த உறவினப் பெண், பொதுமக்களை தாக்கி சிறுவனை மீண்டும் ஆற்றில் மூழ்கடிக்க முயலும் காட்சியும் பதிவாகியுள்ளது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.

மற்றொரு விடியோவில், அந்தப் பெண், சிறுவனின் உடல் அருகே அமர்ந்துகொண்டு, கட்டாயம் குணமடைந்து சிறுவன் உயிரோடு வருவான் என்று கூறி அழும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.

தில்லியில் வசித்து வந்த சிறுவனின் பெற்றோரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவனுக்கு தில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும், கங்கையில் குளித்தால், நோய் தீரும் என்ற தங்களது நம்பிக்கையால் இங்கே அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com