பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கூட்டணி மாறும் வரலாறு

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், விரைவில் பாஜக கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
nitish1085320
nitish1085320


பிகார் முதல்வர் நிதீஷ் குமார், விரைவில் பாஜக கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில மாதங்கள் வரை, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வந்தார்.

அந்த விரக்தி அப்படியே மோதலாக மாறி, இன்று இந்தியா கூட்டணிக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறது.

ஏற்கனவே இவர் பாஜக கூட்டணியில்தான் இருந்து வந்தார். 2022ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி, நெடுநாள் எதிரியாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சியமைத்தார்.

இந்தியா கூட்டணி உருவாக மிக முக்கிய காரணகர்த்தாவாகவும் இவரே இருந்தார். அதனால்தான் அவர் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டதும் அதிருப்தியடைந்தார்.

இதனுடன், இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீடுக்கு ஒத்து வராமலிருக்கும் நிலையில், நிதீஷ் குமாரும் அதிருப்தியில் கிட்டத்தட்ட வெளியேறும் விளிம்பில் உள்ளார்.

இந்த நிலையில்தான், மத்திய அரசை நிதீஷ் குமார் பாராட்டியதும், வாரிசு அரசியலை கடுமையாக சாடியதும் பேசுபொருளானது. அவர் லாலுவின் குடும்பத்தையே மறைமுகமாக பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டே அந்தக் கட்சியை விமரிசித்தால் எப்படி இருக்கும். உடனடியாக லாலுவின் மகள் கோபத்தில் நிதீஷ் குமாரை விமரிசித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், தனது பதிவை நீக்கியிருந்தார்.

இதனால்தான், நிதீஷ் குமார், அடுத்து ஒரு யு டர்ன் அடித்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும், பிகாரில் ஆளும் கூட்டணியை கலைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைக்கவும் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

மறுபக்கம், பிகார் பாஜக மாநில தலைவர்களோ, மீண்டும் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கக் கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்பதாகவும், கிடைக்காவிட்டால் போகிறது, மத்திய அமைச்சராகிவிடுவேன் என்று நிதீஷ் குமார் நினைப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே உறுதி செய்யப்பட்டால், வரும் வாரத்தில் பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது அதே மேடையில் நிதீஷ் குமாரும் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் நடக்கும்பட்சத்தில் பத்து ஆண்டுகளில் நிதீஷ் குமார் செய்யும் 4வது கூட்டணி மாற்றம் இது எனலாம். ஏனென்றால், கடந்த 20 ஆண்டுகளில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள நிதீஷ் குமார், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் என கூட்டணியை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com