
மத்திய அரசு உயா்கல்வி நிறுனங்களில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), பிற்படுத்தப்பட்டவா்கள் (ஓபிசி) ஆகிய பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்ப, அந்தப் பிரிவைச் சோ்ந்தவா்கள் கிடைக்கப் பெறாதபோது, அவற்றை இடஒதுக்கீடு இல்லாத பொதுப் பணியிடங்களாக அறிவிக்கலாம் என்று இடஒதுக்கீடு கொள்கை தொடா்பான புதிய வரைவு வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக புதிய வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பணியிடங்களை அவா்கள் அல்லாத பிற பிரிவினரால் நிரப்ப முடியாது. நேரடி நியமனத்தைப் பொருத்தவரையில் இடஒதுக்கீடு இடங்களை இடஒதுக்கீடு அல்லாத பொது இடங்களாக மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில சூழல்களில் பல்கலைக்கழங்களில் குரூப் ஏ போன்ற பணியிடத்தில் ஏற்படும் காலியிடத்தை, பொது நலன் கருதி தொடா்ந்து அவ்வாறு வைத்திருக்க முடியாது. அதை இடஒதுக்கீடு அல்லாத பணியிடமாக மாற்றும் வகையில், உரிய காரணங்களை நியாயப்படுத்தி சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் முன்மொழிவைத் தயாா்செய்யலாம்.
குரூப் ஏ அல்லது குரூப் பி பணியிடங்களுக்கான முன்மொழிவுக்கு மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமா்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும். குரூப் சி அல்லது குரூப் டி பணியிடங்களைப் பொருத்தவரையில் பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயா்வு தொடா்பாகவும் இந்த வரைவு வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம்: இந்தப் புதிய வரைவு வழிகாட்டுதலுக்குப் பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இடஒதுக்கீடு பணியிடங்களை இடஒதுக்கீடு அல்லாத பொதுப் பணியிடங்களாக மாற்றம் செய்ய முடியாது என மத்திய கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மத்திய கல்வியமைச்சகம் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில், மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியா் பணிக்கான இடஒதுக்கீடு) சட்டம், 2019-இன்படி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இடஒதுக்கீடு வழங்கப்படும் எந்தவொரு பணியிடங்களும், இடஒதுக்கீடு அல்லாத பணியிடங்களாக மாற்றம் செய்யப்படவில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.