
புது தில்லி: மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட வரைவு வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது.
மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பணியிடங்கள், உரிய நபா்களைக் கொண்டு நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், அவற்றை இடஒதுக்கீடு அல்லாத பொதுப் பணியிடங்களாக அறிவிக்கலாம் என யுஜிசி-இன் புதிய வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய சதி நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தாா். யுஜிசி தலைவா் எம். ஜகதீஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தது. ஜகதீஷ் குமாருக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி ஜவாஹா்லால் நேரு மாணவா்கள் சங்கம் திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது.
இதனிடையே, இடஒதுக்கீடு பணியிடங்கள் இடஒதுக்கீடு அல்லாத பணியிடங்களாக மாற்றம் செய்யப்படவில்லை. மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் அனைத்துப் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில், மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியா் பணிக்கான இடஒதுக்கீடு) சட்டம், 2019-இன்படி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது என மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் விளக்கமளித்திருந்தாா்.
இந்நிலையில், அந்த வரைவு வழிகாட்டுதல் யுஜிசி இணையதளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது.
வரைவு வழிகாட்டுதல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலகெடு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அது இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டதாக யுஜிசி தலைவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.