இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்-
Published on
Updated on
1 min read

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கடந்தாண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள காடுகள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான அறிக்கை கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், மார்ச் 2024 வரை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தமாக 13,05,668.1 சதுர கி.மீ காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், ஆக்கிரமிக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு தில்லியை விட அதிகமாகும்.

இதுவரை அந்தமான் நிகோபார் தீவுகள், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், ஆந்திரம், சண்டிகர், தாதர் & நாகர், டாமன் டையூ, கேரளம், லட்சத்தீவு, மகாராஷ்டிரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்தியப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

பிகார், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம். ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்காலா, நாகாலாந்து, தில்லி, ஜம்மு - காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளில் இருந்து தரவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

காடு அல்லது அரசாங்கத்தால் காடாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் (மரங்கள் இல்லாவிட்டாலும்) உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்பின் கீழ் வரும்.

பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகள் 3 வகைப்படும். அவை, ரிசர்வ் காடுகள் (வேட்டையாடுதல், மேய்ச்சல் போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்ட முழுமையான பாதுகாப்பு கொண்டவை), பாதுகாக்கப்பட்ட காடுகள் (சில நிபந்தனைகளுடன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்), வகைப்படுத்தப்படாத காடுகள் (ரிசர்வ் அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகளின் கீழ் வராதவை).

மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மார்ச் 2024 நிலவரப்படி அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 5,406.9 சதுர கி.மீ. அளவிலான காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அசாமில் 3,620.9 சதுர கி.மீ காடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

கர்நாடகத்தில் 863.08 சதுர கி.மீ., தமிழ்நாட்டில் 157.68 சதுர கி.மீ., ஆந்திரத்தில் 133.81 சதுர கி.மீ., கேரளத்தில் 49.75 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 409.77 சதுர கி.மீ ஆக்கிரமிப்பு இதுவரை அகற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முதல் மாநிலங்களுக்கு பலமுறை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் நினைவூட்டி, கடந்த நவம்பர் 11 அன்று கூட்டம் ஒன்றை நடத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com