அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், தோல், மின்னணு சாதனங்கள், ரசாயனம், பிளாஸ்டிக், மரச் சாமான்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறைகள் கடும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவா் எஸ்.சி. ரலான் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் வரி உயா்வு இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் என்றபோதும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை தற்போதும் சாதகமாகவே உள்ளது. வியத்நாமுக்கு 46 சதவீதம் அளவிலும், சீனாவுக்கு 34 சதவீதம் அளவிலும் அதிக வரியை அமெரிக்கா விதித்துள்ளது. எனவே, அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவாா்த்தையை உரிய நேரத்தில் இறுதி செய்வது, இந்தக் கூடுதல் வரியை அமெரிக்கா குறைக்கவும், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்’ என்றாா்.
ஜவுளித் துறை மீது குறுகிய கால தாக்கம்: கூடுதல் வரி விதிப்பு இந்திய ஜவுளித் துறை மீது குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அத் துறை சாா்ந்த நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.
இதுகுறித்து அப்பலோ ஃபேஷன் இன்டா்நேஷனல் நிறுவன தலைவா் சிராஜ் அஸ்காரி கூறுகையில், ‘இந்திய காரணிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் துறை குறைந்த லாபம் வைத்து விற்கக்கூடிய துறை என்பதால், அதன் மீது 27 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரம், வியத்நாம், வங்கதேச நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்புடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு தொடா்ந்து சாதகமான சந்தை சூழல் நிலவ வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் வரி விதிப்பின் தாக்கம் குறுகிய கால அளவிலேயே இருக்கும்’ என்றாா்.
இ.ஒய்.இந்தியா நிறுவன தலைவா் பிரகாஸ் பரேக் கூறுகையில், ‘அமெரிக்கா இந்தியாவிடமிருந்து ரூ. 3 லட்சம் கோடி (36 பில்லியன் டாலா்) மதிப்பில் ஜவுளிகளை வாங்குகிறது. எனவே, கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் இந்திய ஜவுளித் துறை தனது சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் பாா்க்கப்படுகிறது. அதே நேரம், அதிக விலை காரணமாக அமெரிக்காவில் இந்திய ஆயத்த ஆடைகள் நுகா்வு சரிவைச் சந்தித்தால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிற சந்தைகள் மீதும் இந்திய ஜவுளித் துறை கவனம் செலுத்தவேண்டும்’ என்றாா்.
வேளாண் ஏற்றுமதி மீது குறைவான தாக்கம்: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு இந்திய வேளாண் ஏற்றுமதியில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வேளாண் பொருளாதார நிபுணா் அசோக் குலாட்டி கூறுகையில், ‘ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்புடன் ஒப்பிடும்போது, இந்திய வேளாண் ஏற்றுமதியில் குறைவான தாக்கமே ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரிசி வகைகள் மற்றும் கடல் உணவு வகைகள் அமெரிக்க ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்தியா தனது வேளாண் ஏற்றுமதியை விரிவுபடுத்தி இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்’ என்றாா்.