
பாட்னா: பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது என்று ராஷ்திரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார். அடுத்த தேர்தலில் பிகாரில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த விடமாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்களை இந்த மசோதா கொண்டுள்ளது.
இந்த நிலையில், பாட்னாவிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை(ஏப். 5) பேசியதாவது: “முஸ்லிம்களின் நல விரும்பிகளைப் போல தங்களைக் காட்டிக் கொள்ளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதனுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் உண்மை முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்த மசோதா குறித்து ஒரு வார்த்தைகூட சொல்லாதது துரதிருஷ்டவசமானது.
அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், பிகாரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த விடமாட்டோம்” என்றார்.