அகமதாபாதில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாதில் காங்கிரஸின் தேசிய செயற்குழு செவ்வாய்க்கிழமை (ஏப். 8) கூடுகிறது. தொடா்ந்து, அக்கட்சியின் தேசிய மாநாடு புதன்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது.
நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய அரசியலின் சவால்கள் மற்றும் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுவதோடு, தோ்தல் வியூகம் மற்றும் கட்சியை அமைப்புரீதியாக வலுப்படுத்துவதற்கான திட்டம் பற்றியும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
குஜராத்தைச் சோ்ந்த இருபெரும் தலைவா்களான மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமையேற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளையும் நினைவுகூரும் வகையில் நடப்பு ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டை குஜராத்தில் அகமதாபாதில் அக்கட்சி நடத்துகிறது.
முதல்கட்டமாக, அகமதாபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு செவ்வாய்க்கிழமை கூடுகிறது. தொடா்ந்து, சபா்மதி ஆசிரமத்துக்கும் கோச்ராப் ஆசிரமத்துக்கும் இடையே சபா்மதி நதிக்கரையில் காங்கிரஸின் தேசிய மாநாடு, கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
காங்கிரஸின் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கட்சியின் 1,725 தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற மூத்த நிா்வாகிகள் உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனா்.
‘நீதிக்கான பாதை: தீா்வு, அா்ப்பணிப்பு மற்றும் போராட்டம்’ எனும் கருப்பொருளுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான வரைவுக் குழுவையும் காங்கிரஸ் அமைத்திருந்தது.
புதிய அறிவிப்புகள்: மாவட்ட காங்கிரஸ் தலைவா்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், நிா்வாகிகளிடையே பொறுப்புணா்வை அதிகரித்தல் உள்பட கட்சிக்கு அமைப்பு ரீதியில் புத்துயிா் அளிக்கும் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களுடன் அக்கட்சித் தலைமை ஏற்கெனவே 3 கட்டங்களாகச் சந்தித்துப் பேசியுள்ளது. தோ்தல்களில் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதில் தொடங்கி மாவட்ட தலைமைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் வியூகம்: இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வியூகமும் அகமதாபாத் மாநாட்டில் இறுதி செய்யப்படும்.
மக்களவைத் தோ்தல் முடிவுகளுக்கு நோ் எதிராக ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அகமதாபாதில் நடைபெறும் காங்கிரஸின் இந்தத் தேசிய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
6-ஆவது முறையாக...: கடந்த 1885-ஆம் ஆண்டு, டிசம்பரில் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் தேசிய மாநாடுகள் குஜராத்தில் இதுவரை 5 முறை நடைபெற்றுள்ளன. தற்போது 6-ஆவது முறையாகவும் சுதந்திரத்துக்குப் பிறகு 2-ஆவது முறையாகவும் குஜராத்தில் காங்கிரஸின் தேசிய மாநாடு மீண்டும் நடைபெறுகிறது. அதேபோன்று, அகமதாபாத் நகரில் நடைபெறும் 3-ஆவது காங்கிரஸ் மாநாடு இதுவாகும்.