
புது தில்லி: கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டுள்ள நிலையில், கலால் வரியை பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.
அதாவது, கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிட்டத்தட்ட கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகளும் இந்தியாவில் குறையும் என அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத வகையில் மத்திய அரசு கலால் வரியை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வணிக அழுத்தம், சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், எண்ணெய் விலைகள் இன்று சரிவைக் கண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலையில், கச்சா எண்ணெய் கொண்டு பெட்ரோல் உற்பத்தி செய்யும்போது மீது மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று தெரிந்துவிட்டது. ஆனால் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் லாபத்தை மக்களுக்குக் கொடுக்காமல் மத்திய அரசு பகிர்ந்துகொள்ள முடிவு செய்துவிட்டதே இந்த அச்சத்துக்குக் காரணம்.
மத்திய அரசு சில உற்பத்தி பொருள்கள் மீது விதிக்கும் மறைமுக வரியான கலால் வரியை உற்பத்தியாளர் நேரடியாக மத்திய அரசுக்கு செலுத்திவிட்டு, அதனை உற்பத்தி செய்த பொருளின் விலையுடன் சேர்த்து மக்களிடமிருந்து வசூலித்துக் கொள்வார். இதனால்தான் இந்த அச்சம் வலுவடைந்துள்ளது. ஆனால், இப்போதைக்கு விலை உயர்த்தப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருக்கின்றனவாம்.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும்பட்சத்தில், இவ்வாறு கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தால், உடனடியாக அது பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலிக்கும். ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், அது நேரடியாக மக்களுக்குச் சென்று சேராமல் தடுத்து அந்த லாபத்தை கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு பங்கிட்டுக் கொள்கிறது. இதனால்தான் விலை உயராது என்று விளக்கம் வந்துள்ளது.
அதேவேளையில், நிலைமை சீரடைந்து, கச்சா விலை உயரும் பட்சத்தில், இந்த கலால் வரியையும் சேர்த்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகள் மீது திணித்துவிடுமா அல்லது கலால் வரியை மத்திய அரசு திரும்பப் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.