சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்துவதற்காக குழு ஒன்று கடந்த நவம்பர் 24 அன்று சென்றது.
அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் பலியாகி பலர் காயமடைந்தனர்.
இதனால், அங்கு ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், மசூதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மசூதியில் நிறுவுவதற்காக தொல்லியல் துறை சார்பில் அனுப்பப்பட்ட புதிய பெயர்ப்பலகையில் ’ஜாமா மசூதி’ என்ற பெயருக்கு பதிலாக ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீல நிறத்தில் இருக்கும் இந்திய தொல்லியல் துறை அனுப்பிய பெயர்ப்பலகை சத்யவ்ராத் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள புதிய பெயர்ப்பலகை விரைவில் அங்கு பொருத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய தொல்லியல் துறை அதிகாரி விஷ்ணு சர்மா, “மசூதியின் முன்பு தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பழைய பெயர்ப்பலகை நீக்கப்பட்டு ‘ஷாஹி ஜாமா மசூதி’ என்ற பெயர்ப்பலகையை மர்ம நபர்கள் முன்னர் வைத்தனர்.
இந்திய தொல்லியல் துறையின் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடியே ‘ஜும்மா மசூதி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மசூதி வளாகத்தினுள் இதே பெயரில் மற்றொரு பெயர்ப்பலகை ஏற்கனவே உள்ளது” என்று தெரிவித்தார்.
பெயர்ப்பலகை எப்போது நிறுவப்படும் என்ற தகவலை தொல்லியல் துறையினர் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.